இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தலான தொடக்க வீரராக இருந்து சமீபத்தில் ஓய்வினை அறிவித்திருந்தவர் தான் ஷிகர் தவான். விராட் கோலி, ரோஹித் ஷர்மா என இரண்டு பேரை நாம் நினைவுக்கு கொண்டு வந்தாலே மூன்றாவதாக உடனடியாக தோன்றுவது ஷிகர் தவானின் பெயர் தான். அவர்கள் இரண்டு பேருடன் இணைந்து பல அதிரடி பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்காக அமைத்துள்ள ஷிகர் தவான், Mr. ஐசிசி என்றும் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறார்.
இதற்கு காரணம் எந்த சர்வதேச வீரராலும் முடியாத பல சாதனைகளை ஐசிசி தொடர்களில் படைத்துள்ள ஷிகர் தவான், நிறைய ரன்கள் குவித்து பல மிரட்டலான இன்னிங்ஸ்களையும் தன்வசமாக்கி உள்ளார். மிக முக்கியமான தொடக்க வீரராக இந்திய அணிக்கு கிடைத் ஷிகர் தவான், சமீப காலமாக இளம் வீரர்களின் வருகையால் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.
இது பற்றி அவரே பல வெளிப்படையான கருத்துகளையும் தெரிவித்திருந்த சூழலில், கடந்த ஒரு சில ஆண்டுகளாக அவருக்கான வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது. அப்படி இருக்கையில் தான் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினையும் சமீபத்தில் தவான் அறிவித்திருந்தார். ஒரு முறையாவது இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவானின் முடிவு பெரிய அளவில் ரசிகர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருந்தது
அப்படி ஒரு சூழலில் ஷிகர் தவான் பற்றி முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஷிகர் தவானுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் சேவாக். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய சேவாக் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.
இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைத்த ஷிகர் தவான், தனது முதல் போட்டியிலேயே 187 ரன்கள் அடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார். அதுவும் 85 பந்தில் சதமடித்து சேவாக்கிற்கு இணையான பேட்டிங்கை தவான் வெளிப்படுத்தியது பற்றி பேசிய சந்தீப் பாட்டில், “ஒரு இளம் வீரர் ஃபார்மில் இருக்கு போது நீங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு கிடைப்பது மிக முக்கியம்.
அந்த தொடருக்கு முன்பாக தான் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணியில் ஆடி இரட்டை சதம் மற்றும் சதத்தை தவான் அடித்திருந்தார். அவரை முதல் டெஸ்ட் போட்டியில் களமிறக்க நான் ஒருவன் தான் ஆதரவு தெரிவித்தேன். தேர்வுக் குழுவில் இருந்த மற்ற நான்கு பேரும் எனக்கு எதிர்ப்பு தெரிவித்து சேவாக் ஆட வேண்டுமென கூற, நான் வாய்ப்பு கொடுத்து அவர் முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.
இதனால் தவானை டெஸ்டில் தேர்வு செய்ய வேண்டும் என என்னுடைய முடிவும் சிறந்த ஆலோசனை என நிரூபணம் ஆனது” என சந்தீப் பாட்டில் கூறியுள்ளார்.