இந்திய அணியை சுற்றி தற்போது அதிகம் விவாதமாக மாறி வருவது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு பேரின் பேட்டிங் ஃபார்ம் தான். டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து அவர்கள் ஓய்வு பெற்றாலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஆடி வருகின்றனர். ஆனால் அதிலும் அவர்களால் நினைத்தது போல ஆடி ரன் சேர்க்க முடியாமல் பெரிய அளவில் தடுமாற்றத்தை தான் கண்டு வருகின்றனர்.
கடந்த சில தொடர்களாகவே ரோஹித் மற்றும் கோலியின் ஃபார்ம் காரணமாக இந்திய அணி பேட்டிங்கில் கோட்டை விட்டு வருவது வாடிக்கையாகவே உள்ளது. ரோகித் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுக்க இன்னொரு புறம் கோலி ஃபார்முக்கு வருவது போல் தெரிந்தாலும் அதனை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்திருந்த விராட் கோலி, 3 டெஸ்டிலும் சேர்த்து 126 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். அந்த இன்னிங்சிலும் அவர் சதமடிக்காமல் போயிருந்தால் நிச்சயம் 50 ரன்கள் கூட இந்த தொடரில் தொட்டிருக்க மாட்டார். இதனிடையே, சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருந்த ரோகித் சர்மா, விராட் கோலி பற்றி பேசிய போது, ‘நீங்கள் தானே அவரை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என குறிப்பிடுகிறீர்கள். இதனால் நிச்சயம் கோலி தனது பேட்டிங்கில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு அவராகவே கம்பேக் கொடுப்பார்’ என குறிப்பிட்டிருந்தார்.
அப்படி ஒரு சூழலில் கோலி பற்றி ரோகித் சர்மா தெரிவித்த கருத்தை மறுத்துள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். “ரோகித் சொன்னது ஒரு தவறான அறிக்கை. ஆனால் அவர் அதைத்தான் சொல்லியாக வேண்டும். ஒரு கேப்டனாக அணியில் இருக்கும் வீரர்கள் மீது அவரால் நெருக்கடி போட முடியாது. இதனால் ரோகித் அப்படி பேசி இருந்தார்.
ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனதில் இருக்கும் விஷயத்தை வெளியே பேச முடியாது. இதனால் நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரரான கோலி அவரது பிரச்சனையை அவரே தீர்வு காண்பார் என்ற ரோஹித்தின் கருத்து உண்மை கிடையாது. அது உண்மையாக இருந்திருந்தால் என்றோ கோலி தனது தவறுகளை சரி செய்து கொண்டு ரன் சேர்த்திருக்க வேண்டும்.
இதனால் கோலிக்கு வெளியே இருந்து ஒருவரது உதவி தேவைப்படுகிறது. அவர்தான் பேட்டிங் பயிற்சியாளர். தனியாளாக கோலி தனது பேட்டிங்கில் உள்ள டெக்னிக்கல் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது என்பது தெரிந்து விட்டது. இதனால் அவருக்கு வெளியே இருந்து பேட்டிங் பயிற்சியாளரின் உதவியும் நிச்சயம் தேவைப்படும்” என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.