வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சிராஜ், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டது. அதிலும் சிராஜ் நாடு திரும்பிய நிலையில், விராட் கோலி பேட்டிங் செய்யவே களமிறக்கப்படவில்லை. இதன் காரணமாக இளம் வீரர்களுக்கு பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில் சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலமாக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் மீண்டும் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக 2வது போட்டியில் சஞ்சு சாம்சன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இளம் வீரரான சஞ்சு சாம்சனுடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போதும் உடனிருந்தார். வழக்கமாக இஷான் கிஷனுடன் மட்டும் அதிக நேரம் செலவிடும் ரோகித் சர்மா, திடீரென சஞ்சு சாம்சனுடன் பயிற்சியில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதன் பலனாக சஞ்சு சாம்சன் களமிறங்கிய இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதன் மூலம் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் இஷான் கிஷன் பேக் அப் தொடக்க வீரராகவே அடுத்தடுத்த தொடர்களில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் வந்த பின், அவர்களின் ஃபார்மை பார்த்துவிட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவரை தேர்வு செய்யவே வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றுக்கு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த இரு தொடர்களில் சாம்சன் எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்தே அவருக்கு உலகக்கோப்பைத் தொடருக்கான வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.