ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடரில் ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக ஆடி முதல் இடத்தை பல போட்டிகளில் தக்க வைத்து கொண்டிருந்த நிலையில் தான் தற்போது மிகப்பெரிய தடுமாற்றத்தை கண்டு வருவதுடன் மட்டுமில்லாமல் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. ஜெய்ஸ்வால், சாம்சன், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், சாகல், போல்ட் என ஒரு அணி முழுவதும் சிறந்த வீரர்கள் இருந்தபோதிலும் கடைசியாக நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
முதல் 9 போட்டிகளில் எட்டில் வெற்றி பெற்று ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்திருந்த ராஜஸ்தான் தற்போது நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் ப்ளே ஆப் சுற்றில் குவாலிஃபயர் முதல் ஆட்டத்தை இழக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. கொல்கத்தா அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் அல்லது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னேறலாம் என்றும் தெரிகிறது.
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீதம் இருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றாலே அவர்கள் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி விடலாம். ஆனால் அதே வேளையில் ராஜஸ்தான் அணி கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி அடைய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மிடில் ஆர்டரில் அஸ்வின் மற்றும் ரியான் பராக் சிறப்பாக ஆடியதால் தான் இந்த ஸ்கோராவது அவர்கள் எட்டியிருந்தனர். பல போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்திருந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக உள்ளே வந்து 18 ரன்களில் அவுட் ஆகி இருந்தார்.
இவரது பேட்டிங் ஏமாற்றுவது அளித்திருந்தாலும் மிக முக்கியமான ஒரு சம்பவத்தை இந்த சீசனில் எட்டிப் பிடித்த முதல் ராஜஸ்தான் கேப்டன் என்று பெருமையும் பெற்றுள்ளார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஒரு சீசனில் 500 ரன்கள் தொட்ட முதல் கேப்டன் என்ற பெருமையை தான் சஞ்சு சாம்சன் தற்போது பெற்றுள்ளார்.
இதுவரையிலும் பல கேப்டன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் பார்த்திருந்தாலும் கடந்த சில சீசன்களில் சஞ்சு சாம்சன் தலைமையில் மிகச்சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தான் ராஜஸ்தான் கேப்டனாக மிக முக்கியமான இடத்தையும் சஞ்சு சாம்சன் தற்போது பிடித்துள்ளார். இவருக்கு முன்பாக இதே சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்துராஜ் அந்த அணியின் கேப்டனாக 500 ரன்களை ஒரே சீசனில் அடித்த முதல் கேப்டன் என்ற பெயரையும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.