இந்த சீசனில் ஒரே ஒரு தோல்வியுடன் எட்டு வெற்றிகளை குவித்துள்ள ராஜஸ்தானுக்கு தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி நிச்சயம் ஒரு சிறிய ஸ்பீடு பிரேக்கர் ஆகத்தான் அமைந்துள்ளது. ஒரு வேளை அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறிய அணி என்ற வாய்ப்பையும் பெற்றிருக்கலாம்.
ஆனால் இந்த வாய்ப்பு கடைசி பந்தில், அதுவும் ஒரு ரன் வித்தியாசத்தில் அவர்கள் கோட்டை விட்டிருந்தது ராஜஸ்தான் அணியினருக்கு மட்டுமில்லாமல் அவர்களின் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சிசியாக தான் வந்து சேர்ந்திருக்கும். முதலில் ஆடிய ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் அதனை மிகச் சிறப்பாக நிதீஷ் ரெட்டி, ஹெட் மற்றும் ஹென்ரிச் க்ளாஸன் உள்ளிட்டோர் மீட்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியும், பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுகளை இழந்த பின்னர் நன்றாக ஆடி ரன் சேர்க்க, கடைசி கட்டத்தில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தன. இதனால் கையில் இருந்த போட்டியை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் கோட்டை விட்டு தங்களின் இரண்டாவது தோல்வியையும் இந்த சீசனில் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த தோல்விக்கு பின் பேசி இருந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த சீசனில் நாங்கள் சில போட்டிகளை நெருக்கமாக ஆடியிருந்தோம் அதில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றாலும் இந்த முறை தோல்வி அடைந்துள்ளோம். இந்த வெற்றியின் அனைத்து பங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தான்.
அவர்கள் கடைசி கட்டத்தில் மிக கடுமையாக போராடி இருந்தனர். ஐபிஎல் போட்டியை பொருத்தவரையில் நாம் செய்யும் பிழை மிகவும் சிறிதாக தான் இருக்கும். அதனை சரி செய்வது வரை போட்டி உங்கள் பக்கம் சாதகமாக அமையாது.
புதிய பந்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. அதே பந்து பழையதாகும் போது பேட்டிங்கும் எளிதாக அமைந்திருந்தது. ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் பேட்டிங் அபாரமாக இருந்தது. நானும் பட்லரும் அவுட்டான போதிலும் சிறப்பாக போட்டியை மீட்டுடெடுத்துக் கொண்டு வந்திருந்தனர்” என சஞ்சு சாம்சன் கூறினார்.