முதல் ஒன்பது போட்டிகளில் எட்டில் வெற்றி பெற்று இந்த சீசனில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான நிலையிலும் உள்ளது. கடந்த சில சீசன்களாகவே முதல் பாதி லீக் போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்று அபாரமாக திகழும் ராஜஸ்தான் அணி இரண்டாவது பாதியில் நடைபெறும் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து நெருக்கடி சூழலை அவர்களாகவே உருவாக்கிக் கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த சீசனிலும் ஆடிவரும் நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. லீக் போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினாலும் இந்த ஃபார்மில் எப்படி அவர்கள் பிளே ஆப் போட்டிகளை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
இதற்கு மத்தியில் தான் பிளே ஆப் வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணியையும் அவர்கள் சந்தித்திருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் கேப்டன் சாம் கரண் பொறுப்பை உணர்ந்து ஆட, 19 வது ஓவரில் அவர்கள் இலக்கையும் எட்டிப் பிடித்திருந்தனர். தனக்கு பெரிய அளவில் சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை என்றாலும் தனியாளாக போராடி 63 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கும் வித்திட்டார் சாம் கரண்.
நான்கு தொடர் தோல்விகளால் துவண்டு போன ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், “எங்களுக்கு இன்னும் அதிக ரன்கள் தேவைப்பட்டது. இது 160 ரன்கள் வரை அடிக்கும் பிட்ச்சாக தான் இருந்தது. நாங்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தால் நிச்சயம் 160 ரன்களை தாண்டியிருக்க முடியும். அங்கே தான் நாங்கள் போட்டியில் தோல்வி அடைந்தோம்.
நான் எப்போதும் ஐந்து குவாலிட்டி பவுலர்களுடன் ஆட விரும்புகிறேன். மேலும் நாங்கள் தோல்விகளின் பாதையில் செல்கிறோம் என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும். ஒரு அணியாக எது வேலை செய்யவில்லை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். எங்கள் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர்.
இந்த மாதிரியான நேரத்தில் வீரர்கள் முன்னே வந்து அணிக்காக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் எளிதாக எட்டிப் பிடிக்கும் சூழலில், இது போன்ற விக்கெட்டுகளில் விளையாடி எங்களுக்கு பழக்கமில்லை. இந்த மாதிரி போட்டிகளில் ஸ்மார்ட்டாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்” என சஞ்சு சாம்சன் கூறினார்.