கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியுடனும், ஆச்சரியம் கலந்தும் பார்க்க வைத்த ஒரு போட்டி என்றால் அது யுஎஸ்ஏ மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதி இருந்த போட்டி தான். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி ரன் சேர்க்கவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் ஷாஹீன் அப்ரிடி, பாபர் அசாம், சதாப் கான் ஆகியோர் ரன் குவித்ததால் அவர்கள் 150 ரன்களையும் கடந்திருந்தனர்.
அமெரிக்கா போன்ற அதிக கிரிக்கெட் அனுபவம் இல்லாத ஒரு அணியை வீழ்த்துவதற்கு இது போதுமான ரன்னாக தான் இருக்கும் என நிச்சயம் பாகிஸ்தானே எதிர்பார்த்து இருக்கும். ஆனால் அப்படி இல்லை என டி 20 உலக கோப்பை நடத்திவரும் நாடுகளில் ஒன்றான மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணி அதனை நிரூபித்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பேட்டிங் செய்திருந்த அமெரிக்க அணி மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 159 ரன்களையும் எடுத்து போட்டியை டை செய்திருந்தது. பாகிஸ்தான் அணி ஒரு சில இடங்களில் சிறப்பாக பீல்டிங் செய்யாமல் போனதும் அவர்களின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படும் சூழலில் சூப்பர் ஓவருக்கும் இந்த போட்டி சென்றிருந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்காவிற்கு வைடு மற்றும் ஒவர் த்ரோ மூலம் ரன்களை வாரி வழங்கி 18 ரன்கள் சேர்க்கவும் உதவி இருந்தது பாகிஸ்தான் அணி. இதனால் போட்டியும் கைவிட்டுச் சென்றது போல் இருக்க அதே நெருக்கடியுடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 13 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தது. முன்னதாக கடைசி பந்தில் 5 ரன்கள் வேண்டும் என்ற சூழலில் நான்கு ரன்களை யுஎஸ்ஏ எடுத்து போட்டி டை ஆனதுமே பாபர் அசாம் உள்ளிட்ட அனைவரும் கோபமடைந்திருந்தனர்.
அப்படி ஒரு சூழலில் அவர்கள் தோல்வியும் அடைந்தது பெரிய அளவில் அனைவருக்கும் அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. இதனிடைய இந்த போட்டியில் சூப்பர் ஓவரை வீசிய அமெரிக்க வீரர் சௌரப் நெட்ராவல்கரை பற்றி தற்போது பார்க்கலாம்.
மும்பையில் பிறந்த இவர் இந்திய அணிக்காக 2019 U 19 உலக கோப்பை அணியில் ஆடியுள்ளார். மேலும் ரஞ்சித் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மும்பை அணிக்காக ஆடியிருந்த சவுரப், பின்னர் அமெரிக்காவுக்கு மாறியதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு அமெரிக்க கிரிக்கெட் அணிக்கும் தேர்வாகி இருந்தார்.
மேலும் அந்த அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பும் கிடைக்க தொடர்ந்து தனது பந்துவீச்சு மூலம் பல சிறப்பான சாதனைகளையும் செய்து வந்தார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் 13 ரன்கள் கொடுத்து அவர்கள் வெற்றி பெறவும் காரணமாக இருந்த சௌரப் நெட்ராவல்கர், தற்போது ஒரு ஐடி ஊழியராக இருப்பதும் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மேலும் இவர் U 19 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணிக்காக ஆடிய போது அவர் சிறப்பாக பந்து வீசி இருந்த பிறகும் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. ஆனால் தற்போது மிகச் சிறப்பாக பந்துவீசி அமெரிக்காவை வெற்றி பெற வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.