இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் இரண்டு போட்டிகளின் இடத்தை மாற்றும்படி பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி மற்றும் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தது. பாக்கிஸ்தான் அணி அக்டோபர் 20 ஆம் தேதி பெங்களூரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் என்றும், அக்டோபர் 23 ஆம் தேதி சென்னையில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், பாக்கிஸ்தான் அணி இந்த இரு போட்டிகளையும் அப்படியே இடமாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியை சென்னையிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை பெங்களூருவிலும் மாற்றும் படி கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த கோரிக்கை குறித்து பேசியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் தானிஷ் கனேரியா, பாக்கிஸ்தான் அணியை கடுமையாக சாடி உள்ளார். அவர் பேசுகையில், “பாக்கிஸ்தானின் இந்த செயல் எனக்கு புரியவில்லை. சென்னை மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அங்கு அவர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட விரும்பவில்லை.
அப்படியானால் நீங்கள் ரஷித் கான் மற்றும் பிற ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களை கண்டு அஞ்சுகிறீர்களா? அந்த பிட்சில் ஆப்கானிஸ்தான் அணியை வெல்லமுடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அங்கு ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள வேண்டாம் என்று கோரிக்கை வைப்பதற்கு வேறேந்த காரணம் உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.
அதே போல, அக்டோபர் 15 ஆம் தேதி, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இதற்கும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடத்தை மாற்றும் படி கூறி இருந்தது குறிப்பிட தக்கது. இது குறித்தும் பேசியுள்ள தானிஷ் கனேரியா,
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து விசித்திரமான செயல்களை செய்து வருகிறது. தொடர்ந்து செய்திகளில் இடம்பெற வேண்டும் என்று இப்படி செய்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. நரேந்திர மோடி மைதானம் என்பது மிகப்பெரிய ஒரு மைதானம். பெருமளவில் கூட்டம் வந்து அங்கு போட்டியை கண்டுகளிக்க முடியும். அதே போன்று அங்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளும் உள்ளன. அங்கு நிச்சயம் பாபர் ஆசாம் தலைமையிலான பாக்கிஸ்தான் அணி விளையாடவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் போட்டிகளானது பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.