ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
தற்போது சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் 10ம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் போட்டியில் அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் தடுமாறினர்.
குறிப்பாக இடதுகை பந்துவீச்சாளர் ஷாஹின் அப்ரிடி துல்லியமாக பந்துவீசி 35 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி பேட்டர்கள் மீண்டும் இடதுகை பந்துவீச்சில் தொடர்ந்து தடுமாறுவது, அப்பட்டமாக தெரிந்தது. அதில் ரோகித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோரை போல்டாக்கியது தான் அவரது பந்துவீச்சின் சிறப்பம்சமே.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலி மற்றும் ரோகித் ஷ்ரமா ஆகிய இருவரை போல்டாக்கிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷாஹின் அப்ரிடி படைத்தார்.இந்த நிலையில், கோலியின் விக்கெட்டை எடுக்க தான் வைத்திருந்த பிளேன் குறித்து ஷாஹின் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், விராட் கோலி சிறந்த வீரர். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அதிக ரன்களை அடித்துள்ளார். இந்திய அணியின் முதுகெலும்பே அவர் தான். அவரது விக்கெட் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். எங்களது திட்டமே குறிப்பிட்ட லைன் அண்ட் லெங்க்தில் பந்தை ஸ்விங் செய்து போடுவதுதான். அது சரியாக பலன்கொடுத்தது என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் சராசரியுடன் 540 ரன்களை அடித்துள்ளார். அதில் 2 சதமும், 2 அரை சதமும் அடங்கும். 2012 ஆசிய கோப்பையில் கோலி தனது அதிக ஸ்கோரான 183 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக தான் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் சுற்றுப்போல, சூப்பர் 4 சுற்றிலும் இந்தியாவுக்கு எதிராக ஷாஹின் அப்ரிடி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பாரா அல்லது இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டர்கள் அவரை சிறப்பாக எதிர்கொள்ள திட்டம் வைத்திருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.