அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியடைந்து சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி இருவரும் ஓய்வறையில் மோதிக் கொண்டனர். பாபர் அசாம் பேசுகையில், யாரும் தங்களை சூப்பர் ஸ்டார் என்று நினைக்காதீர்கள். களத்தில் கொஞ்சம் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஷாகின் அப்ரிடி, நீங்கள் என்ன செய்தீர்கள்.. இந்தத் தொடரில் என்ற கேள்வி கேட்க, நேபாள அணிக்கு எதிராக சதம் விளாசினேன் என்று கூறினார் பாபர் அசாம். அதற்கு ஷாகின் அப்ரிடி நக்கலாக சிரித்ததால் பாபர் அசாம் கோபம் அடைந்ததாகவும், பின்னர் இவர்கள் இருவரையும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ஷாகின் அப்ரிடியின் மாமனாரும், முன்னாள் கேப்டனுமான ஷாகித் அப்ரிடி பேசும் போது, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் விளையாட உள்ளது. என்னை பொறுத்தவரை சீனியர் வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் என்று அனைவரும் பாபர் அசாமுடன் பேசி நம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். கடினமான முடிவுகளை அச்சமில்லாமல் எடுக்க வேண்டும், தோல்விகளை பற்றி கவலை கொள்ளாமல் அணிக்கு தேவையான முடிவுகளை பாபர் அசாம் எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அவரை சுற்றி ஏராளமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை செய்து, கேப்டன்சியில் முன்னேற்றம் அடைய வேண்டும். அபாரமான வீரரான பாபர் அசாமை, சிறந்த கேப்டனாகவும் மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும். நான் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக சில மாதங்கள் செயல்பட்டேன்.
அப்போது கேப்டன், பயிற்சியாளர்கள் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தது. கேப்டனிடம் இருந்து இருந்து ஒரு அறிக்கையும், பயிற்சியாளர்களிடம் இருந்து ஒரு அறிக்கையும், வீரர்களிடம் இருந்து வேறு அறிக்கையும் காண முடிந்தது. அதன் மூலம் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்பது தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.