இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்த இந்திய அணியின் அடுத்த இலக்குகளாக 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்கள் உள்ளது. டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாதித்தது போல, ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களிலும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுக்கிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து நிறைய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானில் வைத்து சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில், அவர்கள் இடம்பெற்றுள்ள பிரிவில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
மற்றொரு பிரிவில் சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் மேலும் கூறுகின்றது. இதில் மற்றொரு சிறப்பம்சமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் மீண்டும் ஒருமுறை இடம்பெற்றுள்ளது. ஆனால், பாகிஸ்தானில் வைத்து இந்த போட்டி நடைபெற உள்ளதால் இந்திய அணி அவர்கள் மண்ணில் எதிர்த்து ஆடுமா என்பதே பெரிய கேள்வி தான்.
கடந்த 17 ஆண்டுகளாக பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி எந்த போட்டிகளிலும் ஆடியதே இல்லை. இரு அணிகளும் மோதும் ஐசிசி போட்டிகள் மற்ற நாடுகளில் நடந்து வரும் சூழலில், தற்போது பாகிஸ்தானில் அவர்கள் மோதும் சூழலும் உருவாகி இருந்தது. ஆனால், இந்திய அணி தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது போட்டியை துபாயில் நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.
விராட் கோலி சர்வதேச போட்டிகளில் அறிமுகமானதன் பின்னர் இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் மண்ணில் எந்த போட்டியும் ஆடியதில்லை. அந்த வாய்ப்பு தற்போது வரும் சூழல் இருந்தும் அதற்கு பிசிசிஐ ஒத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.
இதனிடையே, கோலி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்த கருத்து அதிக கவனம் பெற்று வருகிறது. “நாங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு வரவேற்கிறோம். பாகிஸ்தான் அணி இந்திய மண்ணில் ஆடிய போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியலில் இருந்து விளையாட்டு எப்போதுமே தள்ளி இருக்க வேண்டும். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் மண்ணிற்கு வந்து ஆடுவது, பாகிஸ்தான் வீரர்கள் இந்திய மண்ணில் வந்து ஆடுவதை விட என்ன சிறப்பு இருக்கப் போகிறது.
விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் ஆடி விட்டால் இந்தியாவில் கிடைக்கும் அன்பை மறந்து விடுவார். பாகிஸ்தானில் பலருக்கும் விராட் கோலி பிடித்தமான வீரராக இருக்கிறார். எனது பேவரைட் வீரரும் அவர் தான். அவர் டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ஆடியிருக்க வேண்டும்” என ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.