உலகக் கோப்பை தொடருக்கான பங்களாதேஷ் அணி நேற்று வெளியிடப்பட்டது. 15 பேர் கொண்ட இந்த அணியி மூத்த வீரரான தமீம் இக்பால் இடம்பெறவில்லை. இந்த உலகக் கோப்பை தொடருக்கு பங்களாதேஷ் அணியை அவர்தான் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தற்போது அணியில் இடம்பெறாமல் இருப்பது பெரும் விவாதமாக மாறி உள்ளது.
அதேசமயம் ஏற்கனவே ஒரு முறை அவர் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் ஆனால் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அணியில் இணைத்தது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர்,
நான் ஆரம்பத்தில் இருந்து பங்களாதேஷ் அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி உள்ளேன் ஆனால் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் என்னை நான்காம் இடத்தில் ஆடச்சொல்லி அழுத்தம் தருகிறது. இது தேவையற்ற ஒன்றாகும். எனக்கு அந்த இடத்தில் எப்படி ஆடுவது என்றே தெரியாது. இந்த மாதிரி மோசமான ஒரு விளையாட்டில் நான் இருக்க விரும்பவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இப்படியான சூழலில் தான் தமிம் இப்பால் உலக கோப்பை அணிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிம் இக்பாலின் கருத்து குறித்து பேசி உள்ள பங்களாதேஷ் அணியின் கேப்டன் சகிப் அல் அசன் கூறுகையில், “அணியை பலப்படுத்த ஏராளமான விஷயங்கள் அணிக்குள் நடக்கிறது. இதில் யாராவது ஒருவர் தமிம் இக்பாலிடம் அணியின் நன்மைக்காக நீங்கள் நான்காம் இடத்தில் விளையாட வேண்டும் என்று கூறினால் அது எப்படி தவறாகும்? எப்பொழுதும் தனிநபரை காட்டிலும் அணியின் நன்மை தானே முக்கியம்.
ரோகித் சர்மாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஏழாம் இடத்தில் இறங்கி துவங்கி தற்பொழுது ஓப்பனராக உள்ளார். இதில் அவர் பத்தாயிரம் ரண்களுக்கு மேல் அடித்துள்ளார். இப்படியான சூழலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் அவர் விளையாடினால் அது பெரிய பிரச்சனையா?
இதெல்லாம் குழந்தைத்தனமாக உள்ளது. இது என்னுடைய பேட் இதில் நான் தான் விளையாடுவேன். வேறு யாரும் இதில் விளையாட கூடாது என்று சொல்வது போல் உள்ளது. ஒரு வீரர் அணிக்காக எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட வேண்டும். எப்போதும் அணிதான் முக்கியமாக இருக்கவேண்டும். நீங்கள் 100 அல்லது 200 ரன்கள் அடித்தும் அணி தோற்றுவிட்டால் அதனால் எந்த பயனும் இல்லாமல் போகும். நீங்கள் உங்கள் பெயருக்காக, புகழுக்காக விளையாட கூடாது. அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும்.
ஆனால் நீங்கள் அணியை பற்றி சிறிதும் யோசிக்க வில்லை. நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்று உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் என்ன தவறு இருக்கிறது? நீங்கள் அணியின் ஒரு வீரர்தானே? அப்படி இருக்கும் பட்சத்தில் அதை தவறு என்று நினைத்தால் நீங்கள் அணி வீரரே கிடையாது. உங்களுடைய சொந்த ரெகார்டுக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே விளையாட விரும்புகிறீர்கள். அணிக்காக நீங்கள் விளையாட விரும்பவில்லை என்பது தெரிகிறது” என்று சகிப் அல் ஹசன் கூறியுள்ளார்