பொதுவாக கிரிக்கெட் உலகில் எப்போதும் புதிதாக உருவாகும் வீரர்கள் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறுவார்கள். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்கள் பலரும் முணுமுணுக்கும் ஒரு பெயர் தான் சமர் ஜோசப். செக்யூரிட்டியாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வேலை பார்த்து வந்த சமர் ஜோசப், அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் நெட் பந்து வீச்சாளராக கவனம் ஈர்த்ததுடன் சர்வதேச அணிக்கு முன்னேறும் தொடக்கமாகவும் அது அமைந்திருந்தது.
அந்த வகையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பும் சமர் ஜோசப்பிற்கு கிடைத்திருந்தது. இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜோசப், ஆஸ்திரேலிய அணி சிங்கம் போல திகழும் கப்பா மைதானத்தில் அவர்களுக்கு ஆட்டம் காட்டி இருந்தார்.
காலில் காயமடைந்த போதும் திரும்ப வந்த சமர் ஜோசப், இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் 7 விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் சுமார் 24 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் வெற்றி பெற்று வரலாறு படைக்கவும் காரணமாக இருந்ததுடன் அந்த அணியை ஆஸி தொடருக்கு முன்பாக விமர்சித்த பலரின் வாயை தனது பந்து வீச்சு மூலம் அடைத்திருந்தார்.
இதனிடையே, இனி வரும் ஆண்டுகளில் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்றும் பலர் இவரை பாராட்டி வருகின்றனர். அதே போல, இந்தாண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பைத் தொடரிலும், கடந்த ஒரு வருடத்திற்கு உலக கோப்பை தகுதி சுற்றில் சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சமர் ஜோசப் தலை நிமிர வைப்பார் என மனதார அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சமர் ஜோசப் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றாலும் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தும் வந்தனர். அந்த வகையில், ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பையும் சமர் ஜோசப் தற்போது பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. சமர் ஜோசப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் 7 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை புரிந்ததுடன் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் வென்று உலக அளவில் பல டி 20 லீக் தொடர்களில் ஆடும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.
அந்த வகையில், தற்போது ஐபிஎல் தொடரிலும் ஜோசப் தேர்வாகி உள்ளது பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த மார்க் வுட் காயம் காரணமாக விலகி இருந்தார். அப்படி ஒரு சூழலில், அவருக்கு பதில் மாற்று வீரராக 3 கோடி ரூபாய்க்கு சமர் ஜோசப்பை லக்னோ அணி எடுத்துள்ளது.
டி 20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, பல நாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட திட்டம் வகுத்து வரும் சூழலில், சமர் ஜோசப்பின் ஆட்டமும் வெறித்தனமாக இருக்கும் என்றே தெரிகிறது.