அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரரகளை தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் மூலமாகவே இந்திய பேக் அப் வீரர்களை தேர்வு செய்ய தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதிலும் ஷர்துல் தாகூர் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டலான பந்துவீச்சை பதிவு செய்தார். இதன் மூலம் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு இடம் உறுதி என்று சொல்லப்பட்டது.
அதேபோல் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் ஒன்றாக விளையாடினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறைவாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவுக்கு பின்னரும் ஒரு ஆல் ரவுண்டர் தேவையாக உள்ளார். இதற்கேற்ப இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.
தற்போது ஷர்துல் தாகூர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷர்துல் தாகூரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரு ஆல் ரவுண்டராகவும், கீழ் வரிசையில் விளையாடும் பேட்ஸ்மேனாகவும் எனது ரோல் ரொம்ப முக்கியம். எப்போதும் பெரிய இலக்கை நோக்கி விளையாடும் போது சில விக்கெட்டுகள் நிச்சயமாக வீழ்த்தப்படும். அந்த நேரத்தில் ஆட்டம் கைகளில் இருந்து செல்லாமல் இருக்க கீழ் வரிசையில் ஆல் ரவுண்டர்கள் இருப்பது அவசியம்.
எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இந்திய அணி வெற்றிக்கு பங்களிக்க விரும்புகிறேன். அது பேட்டிங்காக இருந்தாலும், பவுலிங்காக இருந்தாலும், ஃபீல்டிங்காக இருந்தாலும் சரி. அதுதான் எப்போதும் என்னுடைய மனநிலையாக உள்ளது. அதேபோல் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக எப்போதுமே விளையாட மாட்டேன். ஒருவேளை இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடினால், என்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.
ஒருவேளை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், நான் கவலைப்பட மாட்டேன். அது அணி நிர்வாகத்தின் கைகளில் தான் உள்ளது. அதேபோல் இடம் வேண்டும் என்று நினைப்பதே தவறு என்று நினைக்கிறேன். அதனை கைவிட்டு, எனது பணியை தொடரவே விரும்புகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் சூழலை புரிந்து, தேவையை அறிந்து விளையாட வேண்டும். சொந்த வெற்றிக்காக விளையாடி எந்த பிரயோஜனமும் இல்லை. அதனை மட்டுமே நான் என்னிடம் சொல்லிக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.