உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நடு வரிசையில் யார் இறங்கப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. கேஎல் ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருந்தாலும் உலக கோப்பைத்தொடருக்கு முன்பு தங்களுடைய மேட்ச் ஃபிட்னஸ்சை அவர்கள் நிரூபித்து தங்களுடைய பார்மை உறுதிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள்.இதனால் அவர்கள் இருவரும் உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவது சந்தேகமே.
இதனால் பலரும் திலக் வர்மாவை நடு வரிசையில் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் புதிய யோசனை ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதன்படி சூரியகுமார் யாதவை நம்பர் நான்காவது வீரராக களம் இறக்குங்கள். அவர்தான் நல்ல அனுபவ சாலியாக தற்போது உள்ள அணியில் விளங்குகிறார். சூரியகுமார் சர்வதேச கிரிக்கெட்டில் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
32 வயதான சூரிய குமார் யாதவ் டி20 கிரிக்கெட் நம்பர் ஒன் வீரராக விளங்கினாலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் விளையாடி வெறும் சராசரியாக 24 என்ற அளவில் தான் வைத்து இருக்கிறார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் தொடரில் அவர் 19,24 மற்றும் 35 என்ற ரன்களைத் தான் அடித்திருக்கிறார். ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் தொடரும் கோல்டன் டக் ஆகி சோகமான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தவான் வலியுறுத்தி உள்ளார்.இதேபோன்று கில் எப்படி தொடராக விளையாடப் போகிறார் என்பதை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரோகித் சர்மாவும், கில்லும் நல்ல தொடக்கத்தை இந்தியாவுக்கு வழங்குவார்கள் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ள ஷிகர் தவான் அனுபவமும் இளமையும் கலந்து இந்த அணி உருவாக்கி இருப்பது சாதகமான விஷயம் என்று கூறியுள்ளார்.