ப்ளே ஆஃப்க்கு செல்ல கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டிய போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இதனால் அந்த அணியின் ப்ளே வாய்ப்பு மேலும் சிக்கலாகியுள்ளது. அடுத்த போட்டியை அந்த அணி வென்றாலும், ரன் ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே இனிமேல் அவர்களின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அமையும். முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி பவுலிங் செய்யும் போது கடைசி ஓவரை சுழல்பந்து வீச்சாளரை வீச வைத்தார் கேப்டன் ஷிகார். ஆனால் அந்த ஓவரை வீசிய ஹர்ப்ரீத் ப்ரார் 23 ரன்களை கொடுத்தது மிகப்பெரிய சொதப்பலாக அமைந்தது. இந்த ஒரு ஓவர் பஞ்சாப் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இது பற்றி போட்டி முடிந்ததும் பேசிய தவான் “ விரக்தியான போட்டி. முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை, களத்தில் ஸ்விங் இருந்த நிலையில் சில விக்கெட்டுகளை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். இது மிகவும் நெருக்கமான போட்டியாக அமைந்தது. லிவிங்ஸ்டன் சிறப்பாக விளையாடினார், துரதிர்ஷ்டவசமாக எங்களால் போட்டியை முடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் சுழற்பந்து வீசும் எனது முடிவு சொதப்பலான ஒன்றாக அமைந்து எங்களுக்கு நெகட்டிவ்வாக முடிந்தது.
கடைசி இரண்டு ஓவர்கள் எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் பவர்பிளேயில் சரியான இடத்தில் பந்தை வீச வேண்டும் என்பது தான் எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பௌலர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. இந்த மாதிரியான விக்கெட்டில், நாம் விக்கெட் எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, சரியான பகுதிகளில் பந்து வீச வேண்டும். அப்படி செய்யாதது எங்களை பாதித்தது.
இதையும் படிக்கலாமே: அடுத்த போட்டி சொந்த மண்ணில், வெற்றி எங்களுக்கு தான் – சி.எஸ்.கேவிற்கு பயம் காட்டும் வார்னர் பேச்சு
ஒவ்வொரு பவர்பிளேயிலும் நாங்கள் 50-60 ரன்கள் கொடுக்கிறோம். பேட்டிங்கின் போது முதல் 2 ஓவர்களுக்கு பந்து ஸ்விங் ஆகும் என்பது நமக்குத் தெரியும். 2வது ஓவரில் நாங்கள் முதல் விக்கெட்டை இழந்தோம், நான் அவுட் ஆனேன. முதல் ஓவரும் மெய்டனாக அமைந்தது” என தோல்விக்கான காரணங்களை அடுக்கியுள்ளார்.