இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆட தகுதியுள்ள வீரராக இருந்த ஷிகர் தவான், தற்போது சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். ரோஹித், கோலி என இன்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் வீரர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இணையாக தொடக்க வீரராக கலக்கியவர் தான் ஷிகர் தவான்.
ஆரம்பத்தில் தவானின் பேட்டிங் எடுபடாமல் போக, தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து தன்னம்பிக்கை அளித்தார் தோனி. அதன் பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக ஆடத் தொடங்கியதன் பின்னர் ஷிகர் தவானின் ஃபார்மே வேற லெவலுக்கு மாறியது என்று சொல்லலாம்.
அந்த அளவுக்கு தனது பேட்டிங் மூலம் தொடக்க வீரராக இந்திய அணியின் ரன் குவிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த ஷிகர் தவான், உலக கோப்பை தொடங்கி பல ஐசிசி தொடர்களின் நாயகனாகவும் விளங்கி இருந்தார். இன்றளவிலும் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தால் நிச்சயம் ரோஹித்துடன் சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டிருப்பார்.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு காயத்தால் சில தொடர்கள் ஆடாமல் இருந்த தவான், பின்னர் வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனிடையே, கில், ஜெய்ஸ்வால் என பல இளம் வீரர்கள் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக உள்ளே வர, ஷிகர் தவானுக்கான இடமும் பறிபோனது.
ஐபிஎல் தொடரில் மட்டும் ஷிகர் தவானை பார்த்து வந்த ரசிகர்கள், நிச்சயம் என்றாவது ஒரு நாள் இந்திய அணியில் மீண்டும் இணைவார் என நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். ஆனால் அது ஒருமுறை கூட நடக்காமல் போக, தற்போது தனது ஓய்வினையும் அறிவித்துள்ளார் ஷிகர் தவான்.
மிக உருக்கமாக தனது ஓய்வு பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த ஷிகர் தவான், தோனி உள்ளிட்ட பலரை குறித்தும் மிக உருக்கமாக சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். ஷிகர் தவானை சச்சின் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்களும் இந்த நேரத்தில் வாழ்த்தி வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், எந்த இந்திய தொடக்க வீரரும் செய்யாத ஒரு முக்கியமான சாதனையை தவான் செய்தது பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் ஆசிய மண்ணில் நிறைய சாதனைகளை செய்திருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் கொஞ்சம் தடுமாற்றத்துடன் தான் சாதனைகளை படைத்துள்ளனர். ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரராக சச்சின், கங்குலி, சேவாக், ரோஹித் என எந்த வீரரும் செய்யாத ஒரு முக்கியமான சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
தெனாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளை SENA நாடுகள் என கிரிக்கெட்டில் குறிப்பிடுவார்கள். இந்த நான்கு இடத்திலும் ஒரு இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு நாள் போட்டியில் சதமடித்த ஒரே வீரர் ஷிகர் தவான் தான். ரோஹித் வரிசையில் இன்னும் பல தொடக்க வீரர்கள் வந்தாலும் இந்த சாதனையை தொட முடியுமா என்பது நிச்சயம் பெரிய கேள்விக்குறி தான்.