ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் மூலம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக இடம் பிடித்திருந்தார் ஷிவம் துபே. ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய அளவில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போக ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் 30 ரன்கள் வரையும் அடித்திருந்தார் ஷிவம் துபே.
இதற்கு ரிங்கு சிங்கையே இந்திய அணியில் சேர்த்து வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் இறுதி போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்கள் சேர்த்திருந்தார். இதனிடையே டி20 உலக கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் களமிறங்கி இருந்தது.
உலக கோப்பையை வென்று இந்தியா மண்ணுக்கு திரும்பி இருந்ததால் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் 2 போட்டிகளில் இந்த தொடரில் ஆடவில்லை. அதன் பின்னர் கடைசி மூன்று போட்டிகளில் இந்த மூன்று பேருமே களமிறங்கி வந்த நிலையில் ஷிவம் துபே தற்போது நடந்து முடிந்த கடைசி போட்டியில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அசத்தி இருந்தார்.
ஒரு கட்டத்தில் 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்திருந்த ஷிவம் துபே, பந்து வீச்சிலும் டீயான் மேயர்ஸ் மற்றும் ஜோனதன் கேம்பல் ஆகியோரின் விக்கெட் எடுத்திருந்தார். ஒரு ஆல் ரவுண்டராக தனது திறனை நிரூபித்து பட்டையை கிளப்பி இருந்த ஷிவம் துபே, இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
ஆட்ட நாயகன் விருது வென்றதற்கு பின் பேசியிருந்த ஷிவம் துபே, “எப்போதுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிப்பது ஸ்பெஷலான விஷயமாக இருக்கும். அதிலும் இன்று சில விக்கெட்டுகளை நான் எடுத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். டி20 போட்டிகளை பொறுத்த வரையில் நீங்கள் அதிகம் பேட்டிங்கில் தடுமாறினாலும் ஒரே ஒரு முறை நல்ல ஷாட் அடித்து விட்டால் நீங்கள் உங்களது பழைய ஆட்டத்துக்கு வந்து விடுவீர்கள்.
ஜிம்பாப்வேவில் அமைந்துள்ள மைதானங்கள் பெரிதாக இருப்பதுடன் இங்கு விளையாடவும் நன்றாக இருக்கிறது. அதே போல இங்குள்ள சூழல் மற்றும் மக்களும் அற்புதமாக உள்ளனர்” என ஷிவம் துபே கூறியுள்ளார்.