டி 20 உலக கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டியில் ஹர்திக் பாண்டியாவால் வங்காளதேச வீரருக்கு வந்த தலைவலியை பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய அணி டி 20 உலக கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்ததுமே அவர்கள் கோப்பையை கைப்பற்றி விடுவார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ரிங்கு சிங், நடராஜன் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது ஒரு பக்கம் விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் மறுபுறம் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் உள்ளிட்டோர் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ஆட உள்ளதும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த இரண்டு பேருமே வங்காளதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இன்னொரு பக்கம், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே இணைந்ததும் இந்திய அணிக்கு கூடுதல் பலம் என கருதப்பட்ட நிலையில், அவர்கள் இரண்டு பேருமே சிறப்பாக ஆடாமல் இந்த போட்டியில் சொதப்பி உள்ளனர். இதனால், லீக் போட்டிகளைத் தாண்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை சந்திக்க நேர்ந்தால் இன்னும் பலமாக தயாராக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி அவர்களும் ஃபார்முக்கு வந்து விட்டால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நிச்சயம் எந்த அணிகளாக இருந்தாலும் அசைத்து பார்க்க முடியாது. மேலும் பந்து வீச்சிலும் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய சாதகம் தான்.
இதனிடையே, ஹர்திக் பாண்டியா அடித்த பந்தினால் வங்காளதேச வீரருக்கு காயம் ஏற்பட்டதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, கடைசி ஓவரில் ஷோரிபுல் இஸ்லாம் பந்தை எதிர்கொண்டார்.
அப்போது ஹர்திக் பாண்டியா அடித்த பந்து நேராக வர, அதனை பந்து வீசிய சோரிபுல் இஸ்லாம் தடுக்க முயன்றார். ஆனால், பந்து மிக வேகமாக வந்ததால் அதனை தடுக்க முயன்ற போது ஷோரிபுல் இஸ்லாம் கையில் தாக்கியது. அவரை தாண்டி பந்து செல்ல, மறுபுறம் வலியால் துடிதுடித்து போனார் ஷோரிபுல்.
அப்படியே வேதனையில் தனது கைவிரல்களை பிடித்த படி கீழேயும் ஷோரிபுல் இஸ்லாம் உட்கார, பின்னர் பங்களாதேஷ் அணியின் பிசியோ அவரை அழைத்து சென்றார். மேலும் இந்த காயத்தால் ஷோரிபுல் இஸ்லாம் வங்காளதேச அணியின் முதல் சில போட்டிகளில் ஆட முடியாது என்ற பரபரப்பான தகவல்களும் வெளியாகி உள்ளது.