ஆர்சிபி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த 16 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை கைப்பற்றாமல் இருந்து வந்த அணி இந்த முறை எப்படியாவது வென்று விடும் எனப் பார்த்தால் சீசனின் ஆரம்பமே அவர்களுக்கு சரியாக படவில்லை. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்திருந்த பெங்களூரு அணி தங்களின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.
அந்த போட்டி கூட தினேஷ் கார்த்திக் அதிரடியின் காரணமாக தான் இறுதி ஓவர்களில் வெற்றி பெறும் நிலை உருவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தங்களது மூன்றாவது போட்டியில் கொல்கத்தா அணியை தங்களின் ஹோம் கிரவுண்ட்டான பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொண்டிருந்தது.
கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து முறை கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணி இந்த மைதானத்தில் மோதி இருந்த நிலையில் ஒரு போட்டி கூட பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியவில்லை. சொந்த மைதானம் என்ற போதிலும் பெங்களூரால் கொல்கத்தாவை அசைத்து பார்க்க முடியவில்லை என்பதால் இந்த முறை அதற்கு ஒரு பதிலடி கொடுத்து விடும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த நாள் ஆர்சிபி நாளாக அமையவில்லை என்பது தான் உண்மை.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 182 ரன்கள் எடுத்திருந்தது. பெங்களூரு வீரர்கள் ரன் சேர்க்கவே சிரமப்பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்சில் நரைன் கூட அதிரடியாக ஆடி இருந்தார். பிட்ச்சின் தன்மை காரணமாக தான் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய எளிமையாக இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் இலக்கை 17வது ஒவரில் முடித்து அசர வைத்திருந்தனர்.
இதனால் மூன்று போட்டியில் ஆடி உள்ள பெங்களூரு அணி ஒரு வெற்றியை மற்றும் பெற்றுள்ள நிலையில் அடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலையும் அவர்களுக்கு உருவாகியுள்ளது. மறுபுறம் இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் பெங்களூரை வீழ்த்திய பின் பேசியிருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாக இல்லை என்பது தெரிந்ததும் உள்ளே வந்த ரசல் சிறப்பாக பந்து வீசி அதுவும் இந்த கண்டிஷனில் ஸ்லோ பந்துவீச்சு எடுபடும் என தெரிந்து வைத்து செயல்பட்டது அசத்தலான ஒரு ஐடியாவாக இருந்தது.
அதேபோல நரைனும் கூட தொடக்க வீரராக இறங்கி தனது பணியை மிக அற்புதமாக செய்து முடித்தார். முதலில் அவரை பேட்டிங்கில் தொடக்க வீராக இறக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தான் இருந்தோம். ஆனால் அவர் களத்தில் இறங்கி அதிரடியான வேலையை பார்த்து வைத்தார். இந்த நேரத்தில் நான் வேறு எதை பற்றியும் எதிர்பார்க்க விரும்பவில்லை. இந்த தொடர் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது. மேலும் மற்றவர்களின் வெற்றியையும் ரசித்து கொண்டாடுகிறேன். அதுதான் இப்போதைய திட்டம்” என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.