ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், பிலிப்ஸ் சால்ட், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ரசல் என பல சிறப்பான வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தகுதி உள்ள ஒரு அணியாகவும் பார்க்கப்பட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசராக கௌதம் கம்பீர் இணைந்துள்ளது அந்த அணியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சாளராக இருந்த நரைனை ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி பேட்டிங்கிலும் முத்திரை பதிக்க முக்கிய காரணமாக இருந்தவர் தான் கம்பீர். அவர் கொல்கத்தாவில் இருந்து விலகியதன் பின்னர் நரைன் மிடில் ஆர்டரில் இறங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் கடந்த சில போட்டிகளாகவே தொடக்க வீரராக தான் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி வருகிறார்.
முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடுவதை மட்டுமே நோக்கமாக வைத்துள்ள நரைன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டிருந்தார். 39 பந்துகளில் ஏழு சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் மற்றும் ரசல் அதிரடியால் 272 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்திருந்தது.
இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியை பொறுத்தவரையில், கடின இலக்காக இருந்த போதிலும் அதனை அடைய முயற்சிகளை கூட சரியாக செய்யவில்லை. ஸ்டார்க் மற்றும் வைபவ் ஆரோரா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுக்க, 33 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது டெல்லி. பின்னர் ரிஷப் பந்த் மற்றும் ஸ்டப்ஸ் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தாலும் இலக்கை நெருங்க கூட அது உதவவில்லை.
இவர்கள் இருவரும் அவுட்டானதும் சிறிய இடைவெளியில் டெல்லியின் விக்கெட் விழ, 166 ரன்களில் ஆல் அவுட்டாகினர். இதனால், கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்த தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “நாங்கள் 277 ரன்களை கடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் 210 முதல் 220 ரன்கள் வரை அடிப்போம் என்று தான் நினைத்தோம். ஆனால் 270 ரன்களுக்கு மேல் சேர்த்தோம். டாஸின் போது நான் கூறியது படி, பவர் பிளேவில் சுனில் நரைன் பந்து வீச்சாளர்களை அடித்து ஆடுவதாக தான் இருந்தது. ஒரு வேளை அவர் தவற விட்டால் பின்னால் வரும் வீரர்கள் அதை செய்ய வேண்டும் என்று தான் திட்டம் போட்டிருந்தோம்.
அறிமுக வீரர் ரகுவன்ஷி பயமே இல்லாமல் முதல் பந்தில் இருந்து ஆடினார். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர் ஆடினார். அவர் ஒரு ஸ்மார்ட்டான பேட்ஸ்மேன். அவர் அடித்த ஷாட்கள் அவ்வளவு அற்புதமாக இருந்தது. ஸ்டார்க், வருண் என பந்து வீச்சாளர்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டது சிறப்பாக இருந்தது. ஹர்ஷித் ராணாவின் காயம் பற்றி தெரியவில்லை. விரைவில் அவர் சரியாவார் என நினைக்கிறேன். எங்களுக்கான முக்கியமான விக்கெட்டை எடுத்த வைபவ் அரோரா சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார்” என ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.