கடந்த சீசன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த முறை அதிக பலத்துடன் திரும்பி வந்ததுடன் மட்டும் இல்லாமல் தங்கள் மீதான தவறுகள் அனைத்தையுமே திருத்திக் கொண்டுள்ளது. கௌதம் கம்பீர் ஆலோசராக மீண்டும் கொல்கத்தா அணியில் இணைந்தது மிகப்பெரிய சாதகமாக அமைந்த நிலையில் சுனில் நரைன், ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், பிலிப் சால்ட் என அனைவருமே அதகளம் செய்து வருகிறார்கள்.
இவர்களது ஃபார்மின் காரணமாக மற்ற எந்த அணிகளும் கொல்கத்தா அணியை பெரிதாக அசைத்து பார்க்க முடியாத ஒரு சூழலில் தான் 12 போட்டிகள் ஆடி முடித்து ஒன்பது போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இதனை உறுதி செய்திருந்த கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 16 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு இருந்த நிலையில், அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்திருந்தார்.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதனை தொடர முடியாமல் போக, 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றிக்கு பின் பேசியிருந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதை இந்த போட்டிக்கு முன்பே வெளிப்படுத்தி இருந்தேன் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் நிறைய கேம் சேஞ்சர்கள் இருப்பதால் அவர்கள் அனைவருமே சிறப்பாக ஆடி வெற்றி பெற வைத்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்குமே எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ அவர்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மும்பை அணி முதல் ஆறு ஓவர்களில் நன்றாக ஆடி இருந்தாலும் நாங்கள் அதன்பின் எப்படி இந்த சூழலில் நாங்கள் திரும்பி வந்தோம் என்பது தான் அபாரமாக இருந்தது.
நான் சாதனைகளைப் பற்றியும் புள்ளி விவரங்களை பற்றியும் பெரிதும் கண்டு கொள்வது கிடையாது. வானிலை சிறப்பாக இல்லை என்ற போதிலும் இந்த போட்டியில் நாங்கள் வென்றது தான் மிக முக்கியம். அந்த தினத்தில் ஒரு பந்து வீச்சாளராக யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் தான் நான் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணாவிற்கு ஓவர்களை கொடுத்திருந்தேன். வலைப்பயிற்சியில் வருணின் லெக் பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவது கடினமாக இருந்தது” என ஷ்ரேயஸ் ஐயர் கூறினார்.