ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் வரவிருக்கும் நிலையில் இந்திய வலது கை ஆட்டக்காரரான ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மிகப்பெரும் பலமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர் ஆடியதே இவரது கடைசி ஆட்டமாகும். அதன் பிறகு அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது.
காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் அதன் பிறகு எந்த ஒரு ஆட்டத்தையும் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் பார்டர் கவாஸ்கர் டிராபி, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகிய அனைத்து தொடர்களையும் ஆட முடியாமல் போனது. இந்த நிலையில் காயத்தில் இருந்து முழுமையாக மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் ஆலூரில் உள்ள பயிற்சி மையத்தில் வரவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்காக முழுமையாக தயாராகி வருகிறார்.
சமீபத்தில் இதைப் பற்றி பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரேயாஸ் கூறியுள்ளதாவது: நான் இந்திய அணியில் மீண்டும் இணைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இங்கு அனைவரது மகிழ்ச்சியான முகங்களை பார்க்கிறேன். மேலும் அணிக்கு திரும்பியுள்ளது மிகவும் த்ரில்லிங்காக உள்ளது என அவர் குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் விவரமாக கூறுகையில்:
அறுவை சிகிச்சைக்கு முன்பு, எனக்கு முதுகு பகுதியில் டிஸ்க் ஸ்லிப் பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு அது எனது கால் பகுதிவரை சென்று அதிகப்படியான வலியை ஏற்படுத்தியது. டசில நேரங்களில் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு வலி இருந்தது. அதன் காரணமாக என்னால் முழுமையாக என்னை வெளிப்படுத்த முடியவில்லை.
மிகுந்த வலியால் நான் ஊசி போட்டுக் கொண்டு பல்வேறு விதமான போட்டிகளில் விளையாடி வந்திருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் இது தவறு என நான் உணர்ந்து மேலும் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தேன். மருத்துவ நிபுணர்கள்தான் அறுவை சிகிச்சை செய்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும், இது நீ கத்தியின் மேல் நடப்பதை போன்றதாகும் என கூறினார்கள் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
மிடிலார்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அணிக்காக 10 ஆட்டங்கலும், ஒரு நாள் போட்டி தொடர்களில் 42 ஆட்டங்களில், டி20 போட்டிகளில் 49 ஆட்டங்களிலும் விளையாடி உள்ளார். இவர் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணியின் மிடிலார்டர் பலமாக உள்ளது. இவர் மட்டுமல்லாமல் மற்ற மிடிலார்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆசிய கோப்பையும் உலகக் கோப்பையும் இந்திய அன்னிக்கே என்று இந்திய ரசிகர்கள் கூறத்துவங்கி உள்ளனர்.