நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதமடித்தார். குஜராத் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம்.
அவருக்கு துணையாக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இந்த ஆண்டில் மட்டும் கில் டெஸ்ட், ஒருநாள், டி 20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்களிலும் சதமடித்து அசத்தியுள்ளார். போட்டி முடிந்ததும் பேசிய கில் “நான் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராகதான் ஐபிஎல்லில் அறிமுகமானேன். இப்போது அவர்களுக்கு எதிராக எனது முதல் சதத்தை அடித்துள்ளேன்.
இன்னும் பல சதங்கள் வரும் என நம்புகிறேன். எனது கடைசி இன்னிங்ஸைப் பற்றி நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. முன்னோக்கி செல்லக் கூடிய சூழ்நிலையில் கவனம் செலுத்துவது முக்கியம். இது என்னுடைய முதல் ஐபிஎல் சதம். இன்னும் பல சதங்கள் வரும் என நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம் குஜராத் அணிக்காக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஒரு அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் கில்.
சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 31 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார். ஆனால் கில், 29 போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டியுள்ளார். சுப்மன் கில்லுக்கு முன்பாக கே எல் ராகுல் 23 இன்னிங்ஸ்களில் பஞ்சாப் அணிக்காகவும், ராபின் உத்தப்பா 28 இன்னிங்ஸ்களில் கொல்கத்தா அணிக்காகவும் 1000 ரன்களை கடந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.