அடுத்த இரண்டு முதல் மூன்று தினங்களுக்கு ஐபிஎல் தொடர்பான செய்திகள் தான் இணையத்தை ஒரு கலக்கு கலக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த பல நாளாக இணையதளத்தில் விவாதமாக இருந்த ஒரு விஷயம் தான் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது பற்றியது.
இதற்கான நாளும் நெருங்கி விட்ட நிலையில் மொத்தமுள்ள 10 அணிகளும் எத்தனை வீரர்களை வெளியேற்றப் போகிறது, யார் யாரை தக்க வைத்துக்கொள்ள போகிறார்கள், யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்து தக்க வைக்க போகிறார்கள் என்பது தொடர்பான பல விஷயங்கள் புரியாத புதிராகவே உள்ளது. இதில் கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை எத்தனை தொகைக்கு தக்க வைத்துக்கொள்ள போகிறது என்பது தொடர்பான விவரங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் இதில் எது உண்மை என்பது ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போது தான் தெரியவரும். இதில் பல கேள்விகளும், குழப்பங்களும் இருப்பதால் ஐபிஎல் அணிகள் இறுதிப்பட்டியலை வெளியிடும்போது தான் அதில் தெளிவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தொடர்ந்து ஆடுவதும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா தொடர்ந்து ஆடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே தோன்றுகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கடந்த சீசனில் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதே போல ரிஷப் பந்த் டெல்லி அணியில் தொடர்வது சந்தேகம் தான் என்றும் கே எல் ராகுலை லக்னோ அணி வெளியேற்றிவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர், பந்த் மற்றும் ராகுல் என மூன்று பேர் ஒரே சீசனில் கழற்றி விடப்படுவதாக வெளியான தகவல், இன்னும் விவாதமாக மாறி உள்ளது.
அப்படி ஒரு சூழலில் மற்றொரு இளம் கேப்டனான சுப்மன் கில், குஜராத் அணிக்காக செய்யப் போகும் விஷயம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும்75 கோடி ரூபாய்க்குள் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பல அணிகள் அதிகபட்சமாக 18 கோடி ரூபாய்க்கு பலரை தக்க வைக்க நினைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மத்தியில் குஜராத்தின் கேப்டனான கில், ரஷீத் கான், சாய் சுதர்சன், ஷாருக்கான் என அந்த அணியில் இருக்கும் பல வீரர்களை தொடர்ந்து ஆட வைப்பதற்காக தனது அடிப்படை தொகையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அவரது தொகை குறையும் பட்சத்தில் மற்ற வீரர்களை நினைக்கும் தொகைக்கு தக்க வைத்துக் கொள்வதுடன் தங்களின் கோர் அணியை அப்படியே தொடர முடியும் வைத்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தோனியை விட அதிக தொகைக்கு ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.