சுப்மன் கில் தலைமையில் முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணி ஒரு சர்வதேச தொடரில் சமீபத்தில் களமிறங்கி இருந்தது. உலகக் கோப்பைத் தொடர் வெற்றியின் காரணமாக பல சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் போக, சுப்மன் கில் ஜிம்பாவே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது தலைமை ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காகவே எடுபடாமல் போனதால் ருத்துராஜ் உள்ளிட்ட வேறு வீரர்களுக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். இதனிடையே அதனை நிஜமாக்கும் வகையில் தான் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்து அதிர்ச்சி கொடுத்திருந்தது.
இதனால் கில் கேப்டன்சி மீது அதிக விமர்சனங்கள் எழுந்ததுடன் மட்டுமில்லாமல் இனி மேலாவது வேறு இளம் வீரர்களை கேப்டன் பொறுப்பில் நியமியுங்கள் என்றும் பலர் பிசிசிஐக்கு அறிவுரை கொடுக்க தொடங்கி விட்டனர். ஆனால் இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இந்திய அணியை மீதம் இருக்கும் நான்கு போட்டியில் சிறப்பாக வழி நடத்தி இருந்த கில், நான்கிலுமே வெற்றி வெற்றி பெற உதவியதுடன் இரண்டு போட்டிகளில் அரைச்சதம் அடித்தும் அசத்தியிருந்தார்.
இதனிடையே கடைசியாக சமீபத்தில் நடந்த 5 வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி 58 ரன்கள் சேர்த்து அவுட்டாகி இருந்தார். அவருடன் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சிவம் துபே 26 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணியும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போக, 19வது ஓவர் முடிவதற்குள்ளாகவே 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இதனால் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4 – 1 என்ற கணக்கில் முடிந்திருந்த நிலையில் ஆட்ட நாயகனாக ஷிவம் துபேவும், தொடர் நாயகனாக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தொடர் முடிந்த பின் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் கில், “இது மிகவும் அற்புதமான தொடர். முதல் தோல்விக்கு பின் வெற்றி பெற வேண்டும் என நாங்கள் காட்டிய வேட்கை அற்புதமாக இருந்தது. இது போன்ற சூழல்களில் ஆடி அனுபவம் இல்லாத வீரர்களும் சூழலுக்கேற்ப தங்களை தயார் செய்து ஆடி இருந்தனர்.
இலங்கையில் இதற்கு முன்பாக ஆசிய கோப்பைக்காக ஒருமுறை ஆடி உள்ளேன். அடுத்து அங்கு சென்று சிறப்பாக ஆடவும் காத்திருக்கிறேன்” என கில் கூறினார்.