கிரிக்கெட் வட்டாரத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிக் கொண்டே இருக்கும். அந்த வகையில், கடந்த சில தினங்களாக அதிகம் விவாதிக்கப்படும் கருத்து என்றால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா இணைந்தது தான்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் புதிதாக உருவான குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை அணிக்காக ஆடி வந்த ஹர்திக் பாண்டியாவை வாங்கி அவரை கேப்டனாகவும் நியமித்திருந்தது. முதல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா, 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியை இறுதி போட்டி வரை அழைத்து வந்து இரண்டாம் இடம் பிடிக்கவும் உதவி இருந்தார்.
அப்படி இருக்கையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு முன்பாக தான் எந்த அணிக்காக ஆடி, சர்வதேச அணியில் சாதித்தாரோ அதே அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா இணைந்துள்ளார். அவரை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி கொண்டது. இது தொடர்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ஹர்திக் பாண்டியா தாமாக முன் வந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், அந்த முடிவை தாங்களும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறியது.
ஐபிஎல் வலராற்றில் மிகவும் வியப்பான முடிவுகளில் ஒன்றாக ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங் அமைந்த சூழலில் பலரும் இது தொடர்பாக தங்களின் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததால் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ள சூழலில், அவர் குஜராத் அணியை எப்படி வழிநடத்த போகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு சுப்மன் கில் பேசும் வீடியோவில், மறைமுகமாக ஹர்திக் பாண்டியாவை தாக்கி உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சுப்மன் கில் பேசும் வீடியோவில், “கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகச்சிறந்த உணர்வு. மேலும் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது எனது கனவும் கூட. இந்த அணியில் அப்படி ஒரு இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை அடக்கியது தான் கேப்டன்சிப். மேலும் கேப்டன்சியில் விஸ்வாசம் என்பது மிக முக்கியம். பல கேப்டன்களின் கீழ் ஆடியுள்ள நான், அதிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருக்க எனக்கு அது உதவும்” என தெரிவித்துள்ளார்.
இதில் கேப்டனின் பண்பு என விஸ்வாசத்தை சுப்மன் கில் குறிப்பிட்டுள்ள சூழலில், இரண்டே ஆண்டுகளில் குஜராத் அணியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியாவிடம் அது இல்லை என்ற தொனியில் அவர் குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை கொட்டி வருகின்றனர்.