இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக வளர்ந்து வருபவர் சுப்மன் கில். உலகக்கோப்பை தொடருக்கு முன் ஆசிய கோப்பையில் மட்டும் 300க்கும் அதிக ரன்களை விளாசி அசத்தினார். இதனால் உலகக்கோப்பையில் விஸ்வரூபம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சில போட்டிகளை தவறவிட்டார்.
முக்கியமாக சென்னை மற்றும் டெல்லி நகரங்களில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சுப்மன் கில் விளையாடவில்லை. அதன்பின் களமிறங்கிய சுப்மன் கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் எடுத்த போது அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.
ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில், 10வது அரைசதத்தை விளாசினார். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 38 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் முறியடித்துள்ளார். இவருக்கு பின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்ஸ்களிலும், ஜாகீர் அப்பாஸ், கெவின் பீட்டர்சன், பாபர் அசாம், வான் டர் ரசன் உள்ளிட்டோர் 45 இன்னிங்ஸ்களிலும் 2 ஆயிரம் ரன்களை சேர்த்துள்ளனர்.
இதுவரை 38 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 6 சதங்கள் மற்றும் 10 அரைசதங்களை விளாசியுள்ளார். அண்மையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் மாறிவிட்டார். ஷாட்களில் மட்டுமல்லாமல் டெக்னிக்கலாகவும் சுப்மன் கில் சிறந்த வீரராக உள்ளார்.
நல்ல உயரத்துடன் இருப்பதன் காரணமாக புல் ஷாட்டை எளிதாக விளாச முடிகிறது. அதேபோல் விராட் கோலியை விடவும் அதிக ஃபிட்னஸை கொண்டு வீரராக சுப்மன் கில் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.