ஆசியக் கோப்பை 2023 தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் பாகிஸ்தான், நேபால் ,ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ,இலங்கை, இந்தியா ஆகிய அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜாஸ்பிரித் பும்ரா , கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளதால் இந்திய அணி மிகவும் வலுவாக காணப்படுகிறது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயரும் கே.எல். ராகுலும் , வேகப்பந்து வீச்சில் ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜாவும் அக்சர் படேலும் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் இலங்கை செல்வதற்கு முன் யோயோ டெஸ்ட் என்ற உடல் தகுதி தேர்வு பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த யோ யோ உடற் தகுதி சோதனையானது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். இந்த சோதனையின் மூலம் வீரர்கள் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்கள் என்பதை அணி நிர்வாகம் அறிய முடியும்.
விராட் கோலி சமீபத்தில் 17.2 மதிப்பெண்களை குவித்து யோ யோ டெஸ்டில் தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். யோ யோ டெஸ்ட் மதிப்பெண்கள் மிகவும் ரகசியமான ஒன்றாகும், இதனை வீரர்கள் பொதுவெளியில் வெளியிடுவது பிசிசிஐ யின் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் என விராட் கோலிக்கு வாய் மொழியாக பிசிசிஐ நிர்வாகத்தினால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
யோ யோ தேர்வில் பங்கேற்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வீரர்களுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லை. ஆனால் ரகசியம் சார்ந்த விஷயங்களை மட்டும் பொதுவெளியில் பகிர்வது கண்டிக்கத்தக்கது என பி.சி.சி.ஐ கூறியிருந்த நிலையில் தற்போது சுப்மான் கில் யோ யோ டெஸ்டில் 18 மதிப்பெண்கள் எடுத்தது பேசு பொருளாகியுள்ளது. சுப்மான் கில்லின் மதிப்பெண்களானது விராட் கோலியின் மதிப்பெண்களை விட அதிகமாக
உள்ளதால் ஃபிட்டஸ்ட் வீரராக அவர் தற்போது கருதப்படுகிறார்.
அரோபிக் பிட்னஸ் டெஸ்ட் ஆன யோ யோ வில் தேர்ச்சி பெற 16 .5 மதிப்பெண்களை ஒரு வீரர் எடுத்தாக வேண்டும். மதிப்பெண்களை வீரர்கள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என கூறியிருந்த பி.சி.சி.ஐ ,அனைத்து வீரர்களும் 16.5 முதல் 18 மதிப்பெண்கள் வரை எடுத்துள்ளதாக கூறியுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.