நேற்று நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழுப்புக்கு 233 ரன்கள் சேர்த்தது. இதில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 60 பந்துகளை சந்தித்து 129 ரன்கள் விளாசி சாமி வந்தவர் போல பேயாட்டம் ஆடினார்.
இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் அவர் விளாசினார். பின்னர் ஆடிய மும்பை அணி 17.1 ஓவர்களில் 182 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இந்த போட்டியில் சதமடித்து ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் ஏகப்பட்ட சாதனைகளை தனது அபார இன்னிங்ஸ் மூலமாக முறியடித்துள்ளார். இந்த சத இன்னிங்ஸின் மூலம் ப்ளே ஆஃப் போட்டிகளில் தனிநபர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சேவாக் அடித்த 122 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
அதே போல ப்ளே ஆஃப் போட்டி ஒன்றில் தனிநபர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையையும் இந்த போட்டியின் மூலம் படைத்துள்ளார் கில். அவர் இந்த போட்டியில் 10 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 851 ரன்களோடு மூன்றாம் இடத்தில் உள்ளார் கில். விராட் கோலி 971 ரன்களோடு முதலிடத்தில் இருக்க, ஜோஸ் பட்லர் 861 ரன்களோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு போட்டியில் கில் விளையாட வேண்டி உள்ள நிலையில் அவர் கோலியின் சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்த தோனி. சேப்பாக்கம் மைதான ஊழியர்களுக்கு அவர் கொடுத்த அன்பு பரிசு. உச்சகட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்.
நேற்றைய அவரின் சதம் இந்த சீசனில் மூன்றாவது சதமாகும். இதன் மூலம் கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் அவர் மூன்று சதங்களை விளாசி மிகவும் அபாயகரமான வீரராக திகழ்கிறார். அடுத்து சென்னைக்கு எதிராக அவர் எப்படி விளையாட போகிறார் என்பதை காண குஜராத் அணியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.