இலங்கையில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை கொழும்புவில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் தடுமாறினர்.
மழை காரணமாக அந்த போட்டி முதல் பாதியுடன் பாதியிலே தடைபட்டு கைவிடப்பட்டது. இதனால் நாளை போட்டி முழுவதுமாக நடைபெற்று முடிவு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் நாளை மறுநாள் ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய வீரர் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஷாஹின் அப்ரிடி, நசமி ஷா போன்ற தரமான பாகிஸ்தான் பந்துவீச்சை நாங்கள் எதிர்கொள்ளாததால் கடந்த முறை நாங்கள் பேட்டிங்கில் சற்று தடுமாறினாம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் இதுபோன்ற சர்வதேச அளவில் விளையாடும்போது, நீங்கள் ஒருகட்டத்தில் இடதுகை பந்துவீச்சாளர்களை சந்தித்துயிருப்பீர்கள். மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது நாங்கள் பாகிஸ்தானுடன் அவ்வளவாக விளையாடியதில்லை. அவர்களிடம் தரமான பவுலிங் அட்டாக் உள்ளது. அவர்களை அடிக்கடி எதிர்கொள்ளவில்லை என்றால் அவர்களை சந்திக்கும் போது சற்று சிரமம் ஏற்படுத்தும். இதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
ஐபிஎல்லுக்கு பிறகு பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்தது குறித்து கேள்வி சுப்மன் கில்லிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், “சில நேரங்களில் தரமான பந்துவீச்சாளர்கள் பேட்டர்களை ஆதிக்கம் செலுத்துவர். அப்போது பேட்டிங் சரிவை சந்திக்கும். இது பேட்டிங் நுணுக்கம் பற்றிய விஷயம் கிடையாது. பவுலர்கள் பற்றிய விஷயம்.
அவர்களும் விக்கெட் எடுக்கத்தான் இருக்கிறார்கள். நீங்கள் நன்கு விளையாடினால் உங்களுக்கு சாதமாக விஷயங்கள் செல்லும். உங்கள் ஆட்டத்தின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து தொடர்ந்து பெரிய ரன்களை அடிக்க விளையாட வேண்டும்” என பதில் கூறினார். மேலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை பின்பற்றுவீர்களா என்ற கேள்விக்கு, “ஆம் நாங்கள் அவரது பேட்டிங்கை பின்பற்றுகிறோம். அவர் உலக தரம் வாய்ந்த பேட்டர்” என கூறினார்.