ஐபிஎல் சீசன் 16-ன் 62 ஆவது லீக் போட்டி நேற்று குஜராத், நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கியது. ஆனால் கடைசி கட்டத்தில் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததால் 200 ஐ தாண்டி செல்ல வேண்டிய ஸ்கோர் 187 ரன்களாக சுருங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஐதராபாத் அணி பவுலர் புவனேஷ்வர் குமார் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டார்.
அப்போது பேசிய அவர் “நான் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராகதான் ஐபிஎல்லில் அறிமுகமானேன். இப்போது அவர்களுக்கு எதிராக எனது முதல் சதத்தை அடித்துள்ளேன். இன்னும் பல சதங்கள் வரும் என நம்புகிறேன். எனது கடைசி இன்னிங்ஸைப் பற்றி நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. முன்னோக்கி செல்லக் கூடிய சூழ்நிலையில் கவனம் செலுத்துவது முக்கியம்.
அபிஷேக் சர்மா பந்தில் அடித்த சிக்சர் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீ எனக்கு பந்து வீசினால் நான் சிக்ஸர் அடிப்பேன் என்று அவரிடம் சொல்லி இருந்தேன்.” எனக் கூறியுள்ளார். அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் பஞ்சாப் அணிக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.