நேற்றைய இரண்டாவது குவாலிபையர் போட்டி ஒரு ஹை வோல்டேஜ் போட்டியாக அமைந்து குஜராத் அணி ரசிகர்களுக்கு அன்லிமிடெட் விருந்தாக முடிந்துள்ளது. இந்த போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. அந்த அணி கலந்துகொள்ளும் இரண்டாவது சீசன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தார் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில். அவர் இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் 10 சிக்ஸர்கள் உள்பட 60 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த இன்னிங்ஸ் மூலமாக இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றியுள்ளார்.
ஆட்டநாயகன் விருது பெற்றபின் பேசிய அவர் “என்னைப் பொறுத்தவரை எல்லா பந்துகளையும் அடித்து விளையாடியது முக்கியமானது. நான் மூன்று சிக்ஸர்களை அடித்த ஓவர் எனக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்தது. அப்போதுதான் இது என்னுடைய நாளாக இருக்கலாம் என்று உணர்ந்தேன். பேட் செய்வதற்கு இது ஒரு நல்ல பிட்ச்.
நான் ஒரு நல்ல சர்வதேச தொடரை முடித்துவிட்டு ஐபிஎல் விளையாட வந்துள்ளேன். கடந்த முறையும் எனக்கு நல்ல சீசனாக அமைந்தது. நான் நன்றாக தொடங்கும் போது, என்னால் பெரியளவில் ஸ்கோர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலிருந்து, நான் என்னுடைய ஆடும் வேகத்தை மாற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன், கடந்த ஐபிஎல்லுக்கு முன்பு நான் காயம் அடைந்தேன், ஆனால் நான் எனது விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றம் அடைய உழைத்து வருகிறேன்.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நியுசிலாந்து தொடருக்கு முன்பாக நான் சில தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளேன். எதிர்பார்ப்புகள் மைதானத்துக்கு வெளியேயும் உங்களைப் பின்தொடரும். ஆனால் நீங்கள் களத்தில் இறங்கியவுடன் அணிக்கு எப்படி பங்களிக்கிறீர்கள் என்பது முக்கியம். ஐபிஎல் தொடரில் இதுவே எனது சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: நாங்க முன்னாடியே ஸ்கெட்ச் போட்டு தான் சூர்யகுமாரின் விக்கெட்டை எடுத்தோம். இது தான் அந்த ஸ்கெட்ச் – மனம் திறந்த மோஹித் ஷர்மா
வரும் ஞாயிறன்று நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியைக் காண இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.