பொதுவாக, கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் அதனை சுற்றி வித்தியாசமாக அல்லது வினோதமாக நடைபெறும் சம்பவங்கள் அதிக கவனம் பெறும். நாம் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் வலம் வரும் போது, கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்க்கும் சம்பவங்கள் அல்லது அது தொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆவதை நாம் கவனித்திருப்போம்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் கூட நிறைய கிரிக்கெட் போட்டிக்கு நடுவே நடக்கும். அப்படி நடக்கும் சம்பவங்கள், சர்ச்சையை கிளப்புவதுடன் கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை செல்லவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது கிரிக்கெட் போட்டியில் அரங்கேறி, பலரையும் அதிர வைத்துள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, அங்கே டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் மோதுகிறது. இதில் முதலாவதாக தற்போது டி 20 தொடர் நடைபெற்று வரும் சூழலில், முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 2 ஆவது போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் வெற்றி பெறும் அணி, தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இதன் முதல் டி 20 போட்டியில் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டிய ஜிம்பாப்வே ஒரு விக்கெட் மட்டுமே மீதம் வைத்து ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தார். ஆனால், போட்டிக்கு நடுவே அவர் செய்த விஷயம் தான் ஐசிசியின் நடவடிக்கை வரை சென்றுள்ளது. ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்த போது சிக்கந்தருக்கும், அயர்லாந்து வீரர்கள் லிட்டில் மற்றும் கேம்பர் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது.
இந்த பேச்சு வளர்ந்து கொண்டே போக, சிக்கந்தர் ராசா தனது பேட்டை எடுத்து கேம்பரை அடிப்பது போல ஓங்கினார். அவரை நடுவர் தடுத்து நிறுத்த, அந்த இடமே கடும் களேபரம் ஆனது. இந்த சம்பவம் ஐசிசி கவனத்திற்கு செல்ல, சிக்கந்தர் ராசாவுக்கு ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதித்து 2 போட்டிகளில் விளையாட தடை விதித்தது.
அதே போல, அயர்லாந்து வீரர்களான லிட்டில் மற்றும் கேம்பர் ஆகியோருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த 2 வது டி 20 போட்டியில் தடை காரணமாக சிக்கந்தர் ராசா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியை சீன் வில்லியம்ஸ் கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.