நடந்து முடிந்த டி20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல, இன்னொரு புறம் அதில் தகுதி கூட பெறாமல் உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் தகுதி சுற்றுடன் வெளியேறி இருந்தது ஜிம்பாப்வே அணி. அப்படி ஒரு சூழலில், கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி தரப்பில் இளம் வீரர்களை எதிர்த்தும் மல்லுக்கட்டி இருந்தது ஜிம்பாப்வே.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவு தான் கிடைத்திருந்தது. கில், ருத்துராஜ், ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் என ஜிம்பாப்வே அணி வீரர்களை விட அதிக அனுபவம் இருந்த வீரர்கள் இருந்தும் இந்திய அணியால் முதல் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.
பந்து வீச்சில் அமர்க்களப்படுத்தி இருந்த இந்திய அணி, பேட்டிங்கில் 100 ரன்கள் தொடவே பெரும்பாடு பட, அவர்கள் தோல்வியுடன் இந்த தொடரை தொடங்கி இருந்தனர். அத்துடன் ஜிம்பாப்வே அணி இந்தியாவை விட பலமாக இருப்பதை போல தோன்றவும் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா முக்கிய காரணமாக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்த்தால் அனைத்தும் தலைகீழாக 2 வது போட்டியிலேயே மாறி இருந்தது. பேட்டிங்கில் எந்த தவறும் இல்லாமல்இந்திய அணி செயல்பட, அவர்கள் 234 ரன்கள் சேர்த்து அபார வெற்றியும் பெற்றிருந்தனர். இதனையடுத்து, இரு அணிகளும் மோதி இருந்த 3 வது டி20 போட்டியிலிலும் ஜிம்பாப்வே அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.
அந்த அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் வீரர்கள் சிறப்பாக ஆடி ஓரளவுக்கு இந்திய அணியின் இலக்கை நெருங்கி வரவும் முயற்சி செய்தனர். ஆனாலும் அதனை வெற்றியாக முடியாமல் போக, அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணியை சமாளிக்க முடியாமல் துவண்டு போயுள்ளது ஜிம்பாப்வே அணி.
இதனிடையே, 3 வது டி20 போட்டிக்கு பின் பேசியிருந்த ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, “இன்று ஃபீல்டிங்கில் தான் மீண்டும் தவறுகளை செய்தோம் என நான் நினைக்கிறேன். இதனால் 20 ரன்களை அதிகம் கொடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். தொடக்க பேட்டிங் பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஒன்றரை வருடத்தில் 15 தொடக்க ஜோடிகளை எங்கள் அணியில் மாற்றி முயற்சித்துள்ளோம். இளம் வீரர்கள் செய்யும் தவறுகளை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சீனியர் வீரர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும். இன்னொரு பிரச்சனையை உருவாக்கி, முதல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது” என கூறி உள்ளார் சிக்கந்தர் ராசா.