வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பின் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதியும், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், கடைசி டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடருக்கு முன் இந்திய டி20 தொடர் நடக்கவுள்ளதால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு முக்கியமாக அமைந்துள்ளது. குறிப்பாக 11 மாதங்களுக்கு பின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். முழுக்க முழுக்க இளம் வீரர்கள் இருப்பதால், அனுபவ வீரரான பும்ரா கேப்டன்சியையும் ஏற்றுள்ளார்.
இதனால் பும்ராவின் பந்தில் பழைய வீச்சு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இளம் அணியுடன் என்சிஏ தலைவரான விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக பயணிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. இதற்கான இந்திய அணி ஆகஸ்ட் 15ஆம் தேதி புறப்பட உள்ள நிலையில், கடைசி நேரத்த்தில் விவிஎஸ் லக்ஷ்மண் விலகியுள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடர் வருவதாக் ஆகஸ்ட் 29 முதல் 5 நாட்களுக்கு இந்திய வீரர்கள் என்சிஏ-வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்திய வீரர்கள் அனைவருக்கும் பயிற்சி முகாமிற்கு ராகுல் டிராவிட் ஏற்பாடு செய்துள்ளார். இதில் அனைத்து வீரர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை. அவருக்கு பதிலாக என்சிஏவில் பயிற்சியாளராக பணியாற்றி வரும் சிதான்ஷு கோடக் அயர்லாந்து தொடரில் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். என்சிஏவில் பேட்டிங் பயுற்சியாளராக செயல்பட்டு வரும் இவர், காயமடைந்த வீரர்கள் மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.
இதனால் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் இல்லாத சூழலில், தலைமை பயிற்சியாளர் பொறுப்பு கோடக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட்டுக்கு பின் அடுத்த பயிற்சியாளரை இப்போதே பிசிசிஐ தயார் செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.