சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் நாய் மைதானத்திற்குள் புகுந்து சேட்டை செய்யும். இதனை பிடிக்க மைதான ஊழியர்கள் ஓடுவார்கள். இதனால் ஆட்டம் நின்று நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இலங்கையில் மைதானத்திற்குள் பாம்பு வந்து வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஐபிஎல் பாணியில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் என்ற தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் பாபர் அசாம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். குறிப்பாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரமேதேசா மைதானத்தில் தான் பாம்பு தொல்லை அதிகமாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த தொடரின் போது பாம்பு மைதானத்திற்குள் வந்ததால் போட்டி தடைப்பட்டது. இந்த நிலையில் பாம்பை மைதான ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் ஜாப்னா மற்றும் கேண்டி அணிகள் மோதிய ஆட்டத்தில் பாம்பு திடீரென்று மைதானத்திற்குள் புகுந்தது.
இதனை கவனிக்காத இலங்கை வீரர் இஸ்ரூ உதானா பில்டிங் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது கேப்டன் பில்டிங் செட் செய்யும் போது உதானா நகர்ந்து சென்றார். அப்போது பின்னால் வந்த பாம்பை உதானா மிதிக்க சென்றார். திடீரென்று அங்கு பாம்பு சென்றதைப் பார்த்து அதிர்ச்சியில் உதானா அப்படியே நின்றுவிட்டார்.
இதனை அடுத்து பாம்பு மைதானத்தை விட்டு வெளியேறி கேமரா மேன் பக்கம் சென்றது. இதனால் அங்கு போட்டியை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன்கள் ஓட்டம் பிடித்தனர். இதன் காரணமாக போட்டி சில நேரம் தடைப்பட்டது.
வீரர்கள் பார்வையாளர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் பாம்பு அடிக்கடி வருவது பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற உள்ளது இந்த தருணத்தில் அப்போதும் பாம்பு வந்தால் அது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதனால் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.