டி 20 உலக கோப்பைத் தொடரில் இதுவரை பெரும்பாலும் சிறிய அணிகள் தான் தொடர்ந்து மோதி வந்தது. பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் மோதி இருக்க, கனடா, அமெரிக்கா, நமீபியா, ஓமான் உள்ளிட்ட அணிகள் தான் இதுவரை பலப்பரீட்சை நடத்தி வந்துள்ளது.
அப்படி இருக்கையில் தான் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா என இரண்டு பெரிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஹசரங்கா, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆடத் தொடங்கிய இலங்கை அணி ரன் சேர்க்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து கடுமையாக திணறி இருந்தனர். இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 19 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை மட்டும் தான் எடுத்திருந்தனர்.
டி 20 உலக கோப்பைத் தொடரில் இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவான நிலையில் மூன்று வீரர்கள் மட்டுமே 10 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் நோர்ஜே 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி பவர் பிளேவில் போட்டியை முடித்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே வேறொரு விஷயம் தான் இரண்டாவது இன்னிங்சில் அரங்கேறி இருந்தது.
23 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி ரன் சேர்க்கவே பெரும்பாடுபட்டது. அந்த வீரர்கள் அனைவரும் 100 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் வைக்கவே சிரமப்பட்ட நிலையில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பாக மாற கடைசி கட்டத்தில் வந்த ஹென்ரிச் கிளாசன் சிக்ஸர் மற்றும் ஃபோரை பறக்கவிட்டு போட்டியையும் தங்கள் பக்கம் திருப்பி இருந்தார்.
இதனால் 17 வது ஓவரில் 78 ரன்கள் என்ற இலக்கை தென்னாபிரிக்க அணி எட்டிப் பிடித்திருந்த நிலையில் இந்த போட்டியும் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் பெரிய அளவில் சர்வதேச அணிகள் கிரிக்கெட் போட்டிகளை ஆடியதில்லை. அப்படி இருக்கையில் தான் இங்குள்ள மைதானங்கள், எதிர்பாராமல் செயல்பட்டு வருகிறது.
ஒரு அணியால் பிட்ச்சின் தன்மையை கணிக்க முடியாத நிலையில், நியூயார்க்கில் உள்ள இந்த மைதானத்தில் தான் இந்திய அணி 3 போட்டிகளில் ஆட உள்ளது. மேலும் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் வேகப்பந்துவீச்சே அதிகம் ஆதிக்கத்தை செலுத்தி இருக்க, ரோஹித் சர்மா அமெரிக்க பிட்ச்சை நம்பி 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்திருந்தார்.
இப்படி இருக்க, அமெரிக்கா மைதானங்கள் எதிர்பார்த்ததை போல அமையாமல் குறைந்த ரன்களை எட்டிப் பிடிப்பதே சவாலாக இருக்கும் சூழலில் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது என்பதே கேள்விக்குறி தான்.