நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆப் போட்டியான குவாலிஃபயர் 1- ல் கொல்கத்தா அணி அபார வெற்றியை பெற்றதுடன் மட்டுமில்லாமல் 4 வது முறையாக இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சமமான பலத்துடன் விளங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தான் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து குவாலிஃபயர் 1 போட்டியில் மோதி இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் வழக்கம் போல பேட்டிங்கை எடுக்க, அதிக ரன்களை குவிப்பார்கள் என கருதப்பட்டது. ஆனால், கொல்கத்தாவின் பந்து வீச்சு மிக சிறப்பாக அமைய, ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் இந்த முறை பலிக்காமல் போனது. அந்த அணியின் தொடக்க ஜோடியான ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா, 10 ஓவர்கள் முடிவதற்குள் பல முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளனர்.
இந்த இரண்டு பேருமே முதல் இரண்டு ஓவர்களில் அவுட்டாக, இந்த அதிர்ச்சியில் இருந்து ஹைதராபாத் அணியால் மீளவே முடியவில்லை. இதன் பின்னர், 3 வது வீரரான ராகுல் திரிபாதி, சூழலை புரிந்து கொண்டு நேர்த்தியாக ஆடி ரன் சேர்த்தார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து நன்றாக ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் தான், ஒரு குழப்பத்தின் பெயரில் தேவை இல்லாமல் துரதிர்ஷ்டவசமாக அவுட்டானார்.
இந்த சீசனில் அவருக்கு ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருந்த நிலையில், அதனையும் கச்சிதமாக பயன்படுத்தி அதிக ரன்கள் சேர்த்து வந்தார். இதனிடையே, இந்த போட்டியில் நிலைத்து நின்று 100 ரன்கள் வரை அடிப்பதற்கு ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், அவரது ரன் அவுட் ஹைதராபாத் ரசிகர்களுக்கு பெரிய மன வேதனையாக தான் இருந்தது.
இந்த நிலையில், ரன் அவுட்டான பின்னர் ராகுல் திரிபாதி செய்த விஷயம் ஒன்று தற்போது அனைவரையும் மனம் கலங்க வைத்துள்ளது. நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி, எதிர்பாராத நேரத்தில் தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனதால் மனமுடைந்து காணப்பட்டார். அவுட்டான பின்னர், செல்லும் வழியில் இருந்த படியில் சென்று அமர்ந்த அவர், சில நிமிடங்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சில வீரர்கள், ஃபைனலில் தோற்றாலோ அல்லது இறுதி போட்டி வாய்ப்பை இழந்தாலோ மனம் நொறுங்கி போவது போல, தனது அணிக்காக ரன் சேர்க்க முடியாமல் அவுட் ஆனதற்கு இத்தனை எமோஷனலாக ராகுல் திரிபாதி இருந்த புகைப்படங்கள், அதிக கவனம் பெற்று வருகிறது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 14 வது ஓவரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.