இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணி மிகுந்த முனைப்புடன் உள்ளது என்றே கூற வேண்டும். இந்த தொடர் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அனைத்து வீரர்களும் தமது முழு திறனையும் வெளிப்படுத்தும் நோக்கில் உள்ளனர்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை உலகின் மற்ற அணிகளும் நிச்சயம் உற்று நோக்கும். ஏனென்றால் இது இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாகவும் சிறந்த பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. அதே போல வீரர்களின் செயல்பாடுகளும் இதில் கவனிக்கப்படும்.
பிசிசிஐ சமீபத்தில் இந்திய அணிக்கான ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் 17 வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி உள்ளனர். காயம் காரணமாக வெகு நாட்கள் அணியில் இடம்பெறாமல் இருந்த கேஎல் ராகுல் ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு மேலும் சில சிக்கல்கள் இருப்பதால் அவர் ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் பங்கு பெறுவது சந்தேகம் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்தார். இந்த நிலையில், முன்னாள் இந்திய ஓபனிங் பேட்ஸ்மேனும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அகர்கரின் அணி தேர்வு குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
கேஎல் ராகுலுக்கு நிக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் அவரை அணியில் தேர்வு செய்திருக்க கூடாது. உடல் தகுதி இல்லாத ஒரு வீரரை நீங்க எப்படி தேர்வு செய்தீர்கள். நீங்கள் அவரை உலககோப்பைக்கு தேர்வு செய்யவேண்டும் என்று எண்ணினால் தேர்வு செய்துகொள்ளுங்கள். அது வேறு பிரச்சனை. இப்போது வந்து அவர் ஒன்று இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் அதனால் நாங்கள் சஞ்சு சாம்சனை பேக்அப் வீரராக கூட்டி செல்கிறோம் என்று கூறுகிறீர்கள். என்ன இதெல்லாம்?
நாம் ஆசிய கோப்பையில் விளையாட போகிறோம். அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் தான். இரண்டு முறை நாம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்த முறை நிச்சயம் இறுதி போட்டிக்கு தகுதிபெற வேண்டும். இதுவரை உலகக்கோப்பை அணி குறித்து ஒரு தெளிவான முடிவு இல்லை. நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள். செலக்சன் பாலிசி என்று ஒன்று உங்களுக்கு வேண்டும்.
இதே போன்ற ஒரு சிக்கல் ஒரு டெஸ்ட் போட்டியின் போது எங்களுக்கும் வந்தது. சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான அந்த போட்டியின் போது, விவிஎஸ் லக்ஷ்மனுக்கு சில பிரச்சனைகள் இருந்தது. அவர் எங்களிடம், என்னை அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள், நான் உடற்தகுதி பெற்றால் விளையாடுகிறேன் என்று கூறினார். நாங்களும் அவரை அணியில் சேர்த்தோம். ஆனால் தொடர் ஆர்மிக்கும் சமயத்தில் அவர் உடற்தகுதி பெறவில்லை. அதனால் அவருக்கு மாற்று வீரரான ரோகித்தை விளையாட வைக்கலாம் என்று எண்ணினோம் ஆனால் புட்பால் விளையாடியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இறுதியாக விருதிமான் சகா அணியில் அறிமுகமானார். அதன் பிறகு, உடற்தகுதி இல்லாமல் ஒரு வீரரை அணியில் சேர்க்கவே கூடாது என்று முடிவு செய்தோம் என்று கூறினார் ஸ்ரீகாந்த்.