ஒரு காலத்தில் இலங்கை அணி சர்வதேச அரங்கில் சிறப்பாக விளங்கி வந்தது. ஜெயசூர்யா, அத்தப்பட்டு, சமிந்தா வாஸ், மலிங்கா, குமார் சங்கக்காரா, மஹிளா ஜெயவர்த்தனே, முத்தையா முரளிதரன் என அசத்தலான வீரர்கள் நிறைந்திருக்க, பல சர்வதேச அணிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி இருந்தனர்.
இதனால், பல முக்கியமான ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடி முத்திரை பதித்திருந்த இலங்கை அணி, நிறைய தொடர்களையும் வென்று சாதனை புரிந்து வந்தது. ஆனால், சமீப காலமாக ஒரு சில இலங்கை வீரர்கள் சிறப்பாக ஆடினாலும், ஒரு அணியாக அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறி வருகிறார்கள். இன்று ஆசியாவில் இருந்து ஒரு காலத்தில் கத்துக்குட்டி அணிகளாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் கூட பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தும் இலங்கை அணியால் அதனை செய்ய முடியாத நிலை தான் உள்ளது.
இதனால், இனி வரும் இரு தரப்பு தொடர்களில் அதிக கவனம் செலுத்தி, வரும் ஐசிசி தொடர்களில் இலங்கை அணி தங்களின் பழைய நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக முக்கியமான தொடர்களை ஆட ஆரம்பித்துள்ளது.
இதில் முதலாவதாக, டி20 தொடர் ஆரம்பமாகி உள்ள நிலையில், இதன் முதல் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் சேர்த்திருந்தார், இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டி இருந்ததால் அவர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்று தான் அனைவரும் கருதினர்.
ஆனால், இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியோ அதிரடி ஆட்டத்தை ஆடி போட்டியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குஷால் மெண்டிஸ் மற்றும் பத்தும் நிஷாங்கா என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்களை சிதறவிட, ஒரு கட்டத்தில் இலங்கை அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இதன் பின்னர் வந்த அனைவருமே ரன் சேர்க்க தவறியதால் 30 ரன்களில் 9 விக்கெட்டுகளை இலங்கை அணி பறிகொடுத்தது.
இதனால் அவர்களால் 170 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததுடன் இந்திய அணி, 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கால் வெற்றியை பறிகொடுத்த இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா இதன் பின்னர் பேசுகையில், “நாங்கள் முதலில் பந்து வீசிய போது பவர் பிளேவில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செய்லபடவில்லை. ஆனால், அதன் பின்னர் நாங்கள் பலமாக திரும்பி வந்தோம். இந்திய அணி ஒரு கட்டத்தில் 240 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினோம். மிடில் ஆர்டர் பேட்டிங் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கலாம் என தோன்றியது. எங்கள் அணியில் தற்போது சில சோதனைகளுக்காக வீரர்களை ஆட வைத்து வருகிறோம். வருங்காலத்திலும் இதே போன்று நாங்கள் ஆட உள்ளோம்” என அசலங்கா கூறி உள்ளார்.