ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் விளையாடியது. இந்த இரு அணிகள் ஏற்கனவே மோதிய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இதனால் நாகினி டான்ஸ் புகழ் வங்கதேச வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற ஷகிப் அல் ஹசன் இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 117 ரன்களுக்கு 3 விக்ககெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சமரவிக்ரமா நங்கீரமிட்டு அதிரடியாக ஆடினார். எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கடைசி வரை சிறப்பாக ஆடிய அவர் 72 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டர்கள் உட்பட 93 ரன்கள் சேர்த்தார்.
இவரின் அதிரடியான ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. இமாலய இலக்கு இல்லை என்றால், இந்த மைதானத்தில் சவாலான இலக்காக பார்க்கப்பட்டது. இதன்பின் வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் – நைம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் சேர்த்தனர்.
இதனால் விரக்தியடைத கேப்டன் ஷனகா, பந்தை எடுத்துக் கொண்டு தானே அட்டாக்கில் வந்தார். அவரின் பந்துவீச்சில் தொடக்க வீரர்களான மெஹதி ஹசன் மிராஸ் 28 ரன்களிலும், நைம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து பதிரானா வேகத்தில் ஷகிப் அல் ஹசன் 3 ரன்களில் நடையை கட்ட, அதிரடி வீரர் லிட்டன் தாஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கண்மூடி திறப்பதற்கு வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பின்னர் வந்த ரஹிம் – ஹிர்தாய் இணை நிதானமாக ஆடியது. சிறப்பாக ஆடிய ஹிர்தாய் அரைசதம் கடக்க, திடீரென கேப்டன் ஷனகா பந்தில் ரஹிம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கு தொடங்கிய வங்கதேச அணியின் சரிவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறப்பாக போராடிய ஹிர்தாய் 97 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் வங்கதேச அணியின் டெய்லண்டர்களை தீக்சனா மற்றும் பத்திரனா இருவரும் போட்டிபோட்டு வீழ்த்தினார். இதனால் வங்கதேச அணி 48.1 ஓவர்களில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. வங்கதேச அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளதால், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.