இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 16-ஆம் தேதி துவங்கி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2019-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக கன்கஷன் மூலம் போட்டியிலிருந்து வெளியேறினார். அப்படி அவர் கன்கஷன் மூலம் வெளியேறிய இடத்தில் களமிறங்கிய லாபுசேன் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தற்போது வரை மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அந்த லண்டன் போட்டியின் நான்காம் நாளில் என்ன நடந்தது? என்பது குறித்து தற்போது ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் : ஆர்ச்சர் அன்று மிக வேகமாக பந்து வீசிக் கொண்டிருந்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த நாளில் என்னால் பந்தை சரியாக பார்க்க கூட முடியவில்லை.
அந்த 4 ஆம் நாள் ஆட்டத்தில் பந்து பலமுறை என் மேல் பட்டது. ஆனாலும் நான் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் பந்து எனது கழுத்துப் பகுதியில் தாக்கிய போது அந்த தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப எனக்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. ஆனாலும் நான் கன்கஷன் சோதனைகளில் விளையாடும் அளவிற்கு இருப்பதாக தேர்ச்சி பெற்றேன்.
இருந்தாலும் அன்றைய நாள் எனக்கு மிகவும் சோர்வாகவே இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு 12 பீர்கள் அருந்தியது போன்ற உணர்வு எனக்கு அப்போது இருந்தது என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து கன்கஷன் மூலமாக வெளியேறிய ஸ்மித் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸையும் அடுத்த சில போட்டிகளையும் தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.