இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸி அணி 210 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்று சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸி அணி, ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை, டி 20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி அணி ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான சதத்தால் 469 ரன்கள் சேர்த்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சறுக்கிய இடம் ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட்டை விரைவிலேயே அவுட்டாக்காமல் விட்டதுதான். பின்னர் வந்த அனைத்து செஷன்களிலும் இந்தியா ஆஸி அணிக்கு ஈடுகொடுத்துதான் விளையாடியது.
வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஸ்டீவ் ஸ்மித் போட்டிக்கு பின்னர் பேசிய போது “அணிக்கு, இது ஒரு பெரிய சாதனை, நாங்கள் இங்கு வருவதற்கு கடந்த 2 ஆண்டுகளில் சில நல்ல கிரிக்கெட்களை விளையாடினோம், இந்தியாவும் அதே போல சிறப்பாக விளையாடியது. முதல் நாளில் நாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்தோம், டிராவிஸ் ஹெட் நன்றாக விளையாடினார். அதன் மூலம் நான் நங்கூரம் பாய்ச்சி நிலைத்து விளையாட உதவினார். எங்கள் கூட்டணி இன்னிங்ஸை நன்றாகக் கட்டுப்படுத்த உதவியது.
விராட் சிறந்த கிரிக்கெட்டர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு விதிவிலக்கான வீரர். இலக்கைத் துரத்தும்போது அவர் ஆபத்தானவராக மாறுகிறார். போலண்ட் ஐந்தாம் நாள் காலை ஸ்பெல்லில் சிறப்பாக இருந்தார், சரியான பகுதிகளைத் தொடர்ந்து இலக்கு வைத்து வீசினார். அவர் அந்த அவுட்சைட் எட்ஜ்ஜை உருவாக்குவார் என்று எங்களுக்குத் தெரியும்(கோலி விக்கெட்)” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: மீண்டும் டி20 போட்டியில் கால் பதிக்க போகும் சிஎஸ்கே-வின் சின்ன தல ரெய்னா. ஏலத்தில் அவருக்கான அடிப்படை விலையே பல லட்சங்கள்.
ஐந்தாம் நாள் காலை ஆட்டம் சிறப்பாக சென்று கொண்டிருந்த போது ஸ்காட் போலண்ட் வீசிய வெளிப்புற பந்தில் கோலி அடிக்க முயன்று எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அந்த விக்கெட்தான் ஐந்தாம் நாளில் ஆஸி அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.