- Advertisement -
Homeகிரிக்கெட்புஜராவோட கேரியர முடிச்சுட்டாங்க.. இந்தியாவுக்கு அந்த பிளானே இல்ல.. இங்கிலாந்து வீரருக்கே வந்த அதிருப்தி..

புஜராவோட கேரியர முடிச்சுட்டாங்க.. இந்தியாவுக்கு அந்த பிளானே இல்ல.. இங்கிலாந்து வீரருக்கே வந்த அதிருப்தி..

-Advertisement-

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று திரும்பவும் ஃபார்முக்கு வந்திருந்தது. ஆனால் நான்காவது டெஸ்டின் இரண்டாவது நாள், இந்திய அணிக்கு ராசியானதாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கூட பெரும்பாலும் இளம் வீரர்கள் அதிகம் பேட்டிங் செய்து வரும் நிலையில் இவர்களின் ஆட்டம் ஒரு பக்கம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் சில வீரர்கள் தொடர்ந்து தடுமாறி வருவது அதிக விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.

முன்னதாக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்திருந்த இங்கிலாந்து அணி, 353 ரன்கள் எடுத்திருந்தது. முதல் மூன்று டெஸ்டில் ரன் சேர்க்கவே தடுமாறி வந்த ஜோ ரூட், இந்த போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி 122 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி கட்டத்தில் ராபின்சன் மற்றும் ஃபோக்ஸ் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை அளித்ததால் இங்கிலாந்து அணி நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது.

தொடர்ந்து தங்களின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த கில், 38 ரன்கள் அடித்து அவுட்டாக அதன் பின்னர் வந்த யாருமே பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்த தொடரில் தனக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்த போதிலும் ஒரு போட்டியில் கூட தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த தவறி வருகிறார் இளம் வீரர் ராஜத் படிதார்.

அறிமுக டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் அரை சதமடித்திருந்த சர்பராஸ் கான், 14 ரன்களில் அவுட்டாக, ஜெய்ஸ்வால் மட்டும் வழக்கம் போல நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தார். அவர் 73 ரன்களில் அவுட்டாக இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய அணியில் தற்போது துருவ் ஜூரேல், 30 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளதால் மூன்றாவது நாள் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

-Advertisement-

நெருக்கடியான நேரங்களில் இளம் வீரர்கள் ரன் அடிக்கத் தவறியதால் அனுபவ வீரர்கள் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில், ரஞ்சி தொடரில் சிறப்பாக ஆடி வரும் புஜாராவை அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். நல்ல ஃபார்மில் புஜாரா இருந்த போதிலும் அவருக்கான வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டு வருவது கடும் விமர்சனத்தை சந்தித்து தான் வருகிறது.

இந்த நிலையில், இது பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “உலகத்தரம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரரான கோலி இல்லாத போது இந்திய பேட்டிங் வரிசையில் புஜாராவை கொண்டு வர வேண்டும் என்ற விருப்பமே இல்லையா?. அல்லது அவரது சர்வதேச பயணம் முடிவடைந்து விட்டதா?. ஒரு வேளை புஜாரா இடம்பிடித்திருந்தால் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி, நங்கூரம் போலவும் நிலைத்து நின்றிருப்பார் என தோன்றுகிறது” என பிராட் தெரிவித்துள்ளார்.

அவர் சொன்னதை ஆதரிக்கும் ரசிகர்கள், இந்த மாதிரி நேரத்தில் புஜாரா சிறப்பாக ஆடியிருப்பார் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

-Advertisement-

சற்று முன்