இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதை அடுத்து இப்போது இந்திய அணியினருக்கு ஒரு நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது. இதையடுத்து ஜூலை மாதத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று அங்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த சுற்றுப் பயணத்துக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. இதையடுத்து, முன்னாள் இந்திய கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் இந்திய தேர்வாளர்களை கடுமையாக சாடியுள்ளார். அதற்கு காரணம் டெஸ்ட் அணியில் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கான் இடம்பெறாததுதான்.
அறிவிக்கப்பட்ட அணிகளில் 2022-23 ரஞ்சி டிராபி பருவத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் இடம்பெறவில்லை. சர்பராஸ் கான் ஆறு ஆட்டங்களில் 92.66 சராசரியில் மூன்று சதங்களுடன் 556 ரன்களைக் குவித்தார். அவர் இதற்கு முந்தைய 2021-22 ரஞ்சி சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதில் நான்கு சதங்கள் உட்பட 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரை அணியில் எடுக்காதது பற்றி பேசிய கவாஸ்கர், ரஞ்சி டிராபி அல்லது முதல் தர கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களை இந்திய தேர்வுக் குழு புறக்கணிப்பதாக விமர்சித்தார். ஸ்போர்ட்ஸ் டுடேயிடம் பேசிய கவாஸ்கர், “கடந்த மூன்று சீசன்களிலும் சர்பராஸ் கான் சராசரியாக 100 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு மேலும் அவர் அணியில் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?
அவர் பிளேயிங் லெவனில் இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை 15 பேர்கொண்ட அணியில் தேர்வு செய்யுங்கள். அவருடைய திறமை அங்கீகரிக்கப்படுகிறது என்று அவருக்கு சொல்லுங்கள். இல்லையெனில், ரஞ்சி கோப்பை விளையாடுவதை நிறுத்துங்கள். இதில் எந்தப் பயனும் இல்லை, நீங்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களே சிவப்பு பந்து விளையாட்டிற்கும் போதுமானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்,” என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு செல்லும் இந்திய அணி:
ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ருத்துராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யே ரஹானே (துணைக் கேப்டன்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், ரவீந்தர ஜடேஜா,ஷர்துல் தாக்கூர், அக்ஸர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனட்கட், நவ்தீப் சைனி