ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி இருந்த நிலையில் மூன்று அணிகள் இடையே தான் கடும் போட்டி உருவாகி உள்ளது. அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, இவர்களைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியும் இரண்டாவதாக முன்னேற்றம் கண்டிருந்தனர். இன்னொரு பக்கம் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில், டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கும் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக தான் இருந்து வருகிறது.
அப்படி இருக்கையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளில் எந்த இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதில் தான் அனைவரது கேள்வியும், பரபரப்பும், விறுவிறுப்பும் இருந்து வந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருப்பதால் அதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் வாய்ப்பை பலப்படுத்தும் என்பதால் அனைவருமே அந்த போட்டி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினால் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்குமோ அதே அளவுக்கான விறுவிறுப்பைத் தான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி கொடுத்துள்ளது. இந்த மாதிரியான சூழலில் பெரும்பாலும் ஆர்சிபி அணி தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகமாக தோல்வியடைந்துள்ளது.
அது மீண்டும் ஒருமுறை நடந்து சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா அல்லது பல தோல்விகளுக்கு இந்த முறை பதிலடி கொடுத்து ஆர்சிபி அணி வெற்றி நடை போடுமா என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருந்து வரும் அதே வேளையில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் மழை கடுமையாக தொடர்ந்து பெய்து வந்ததால் மைதானமும் தண்ணீரால் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து பல மணி நேரம் கழித்து ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் மழை விடாது பெய்ததன் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போட்டி ரத்தானதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 15 புள்ளிகள் பெற்றுள்ளதுடன் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்கு பின்னர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் பெங்களூரு மோதவுள்ள பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும் மழை வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டி நடைபெற பாதிக்கு பாதி மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.