நடப்பு ஐபிஎல் சீசனின் அனைத்து போட்டிகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே இந்த பிளே ஆப் முடிவு தெரிய வந்தாலும் இதில் யார் எந்தெந்த இடத்தை பிடித்தார்கள் என்பது ஒரு புதிராகவே இருந்து வந்தது.
கொல்கத்தா முதலிடத்தை பிடிக்க, நான்காவது இடத்தை ஆர்சிபி பிடித்து விட்டது. ஆனால் அதே வேளையில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு ஒரு லீக் போட்டி மீதம் இருந்ததால் இவர்களில் யார் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்க போவார்கள் என்பதில் மட்டும் தான் ஒரு புதிர் தொடர்ந்து இருந்து வந்தது.
இதனிடையே பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடி இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மிக அதிரடியாக ஆடி அபார வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் அவர்கள் முன்னேற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை வீழ்த்தினால் அவர்கள் இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம் என்ற சூழல் இருந்தது.
ஆனால் இந்த போட்டியோ மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானதால் ராஜஸ்தான் அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 17 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் குவாலிஃபயர் 1 ஆடும் வாய்ப்பை பெற்றுவிட்டது.
அகமதாபாத் மைதானத்தில் 21 ஆம் தேதி நடக்கும் குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றது. இதே போல 22 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளும் அகமதாபாத் மைதானத்தில் மோதுகின்றது.
முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் பெங்களூர் அணி கடைசி இடத்தையும் பிடித்திருந்த நிலையில் தான் தற்போது அவர்கள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும் நிலையும் உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு கடைசி நடந்த 6 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக நாக்கவுட் போட்டிகளை போல ஆடி வெற்றி பெற்று தற்போது எலிமினேட்டர் வரை முன்னேறி அசத்தியுள்ளனர் பெங்களூர் அணி.
அந்த வகையில் அவர்கள் இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு கொடுத்த மிகப்பெரிய பதிலடி பற்றி தற்போது பார்க்கலாம். இந்த சீசனில் மொத்தமுள்ள பத்து அணிகளும் தங்களின் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைந்திருந்தது. ஆனால் அனைத்து போட்டிகளிலும் வெல்லும் சாதனையை ஒரு நூலிழயில் தவறவிட்டிருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
தங்களின் சொந்த மைதானத்தில் 7 போட்டிகள் ஆடி இருந்த ஹைதராபாத் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்திருந்தது. அது ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த போட்டிதான். தனது சொந்த மைதானத்தில் விழுந்த ஒரே அடியாக ஆர்சிபிக்கு எதிரான தோல்வி இருக்கும் நிலையில், அவர்களை வீழ்த்தியதுடன் ஆர்சி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.