பொதுவாகவே பெரும்பாலான கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தற்போது கமெண்டரி, பயிற்சியாளர், தொலைக்காட்சி கிரிக்கெட் ஷோ மற்றும் அணி நிர்வாகம் என கிரிக்கெட் சார்ந்த பணிகளையே செய்து வருகின்றனர்.
ஆனால் பெரிய அளவில் புகழ் பெறாமல் போகும் சில கிரிக்கெட் வீரர்கள் மோசமான நிலையை கூட சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரரான சூரஜ் ரந்தீவ் தற்போது பஸ் டிரைவராக பணியாற்றி வரும் விடயம் பலரது மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது.
சென்னை அணிக்காக கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடியுள்ள அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் இலங்கை அணிக்காக 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் கூட விளையாடியுள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி விளையாடிய ஒரு வீரருக்கு இப்படி ஒரு நிலையா? என்று ரசிகர்கள் அவரது நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ரந்தீவ் இலங்கை அணிக்காக 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2016 ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகள் விளையாடி உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலியா சென்ற அவர் அங்கு தற்போது மெல்போர்னில் உள்ள ஒரு பிரபல பஸ் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அவரோடு மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்களும் பணியாற்றி வருகிறார்கள் என்றும் தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஜிம்பாப்வேவை சேர்ந்த ஒரு வீரர் மற்றும் இலங்கையை சேர்ந்த ஜெய்சிங்கே என்பவரும் அவருடன் பணியாற்றி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இலங்கை அணிக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமான சூரஜ் ரந்தீவ் 31 ஒருநாள் போட்டிகள், 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். அதோடு ஐ.பி.எல் தொடரில் 2011 ஆம் ஆண்டு சீசனில் தோனியின் தலைமையின் கீழ் 8 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.