அடுத்ததாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் யார் யார் எந்தெந்த வீரர்களை எடுக்கப் போகிறார்கள் என்பதை பற்றிய செய்திகள் தான் இணையத்தை கலக்கி வருகிறது. சமீபத்தில் அனைத்து அணிகளும் குறைந்த பட்சமாக நான்கு முதல் ஆறு வீரர்கள் வரை தக்க வைத்துக் கொண்ட நிலையில் இதுவரையிலும் அந்த வீரர்கள் யார் யாராக இருப்பார்கள் என்று தான் ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
தற்போது அந்த அறிவிப்பும் வந்து விட்டதால் இனி வரும் நாட்களில் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் யாரை எல்லாம் குறி வைப்பார்கள் என்பது பற்றிய விஷயத்திலும் அவர்கள் கருத்து இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக நிறைய மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம் ஒரு சில அணிகளில் இருந்து சிறந்த கேப்டனாக விளங்கிய வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது தான். ராகுல் லக்னோ அணியில் இருந்தும், ஷ்ரேயஸ் ஐயர் கொல்கத்தா அணியில் இருந்தும், ரிஷப் பந்த் டெல்லி அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேப்டனாக இருந்துள்ளார்கள் என்பதை தாண்டி பல அணிகளுக்கும் கிடைக்காத பல திறன் படைத்த பேட்ஸ்மேன்கள் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
அப்படி இருந்தும் அவர்களை ஒவ்வொரு அணிகளும் வெளியேற்றி உள்ளதால் அதற்குள் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தெரிகிறது. இதனால் மூன்று சிறந்த கேப்டன் – பேட்ஸ்மேன்கள் வெளியேறி உள்ளதால் அதற்கான தேவை இருக்கும் அணிகள் நிச்சயம் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை சொந்தமாக்க கடும் போட்டி போடும் என்றும் தெரிகிறது.
இதில் ராகுல் ஆர் சி பி அணியிலும், ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் டெல்லி அணியிலும், ரிஷப் பந்த் பஞ்சாப் அணியிலும் ஆட வேண்டும் என்பதும் பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதற்கு மத்தியில் ரிஷப் பந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதும் பலரின் விருப்பமாக உள்ளது. தோனியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள ரிஷப் பந்த், அவர் ஓய்வு பெற்றதற்கு பின்னர் சிஎஸ்கேவில் அவரது இடத்தை நிரப்ப தகுதியான வீரராக இருக்கிறார். இதனால் சிஎஸ்கேவும் ரிஷப் பந்த்தை சொந்தமாக்க போட்டி போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் தான் இதனை உறுதியாக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் தெரிவித்த கருத்து அதிகம் வைரலாகி வருகிறது. “நான் தோனியை சமீபத்தில் டெல்லியில் வைத்து சந்தித்தேன். அப்போது ரிஷப் பந்த்தும் அங்கே இருந்தார். ஒரு வீரரை மஞ்சள் நிற ஜெர்சியில் (சிஎஸ்கே ஜெர்சி) பார்க்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என சூசகமாக ரிஷப் பந்த் சென்னை அணியில் இடம்பிடிக்க போவது பற்றி ரெய்னா தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது.